சனாதான ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதானம் குறித்து பேசியிருப்பது பாஜக, ஆர் எஸ் எஸ் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உதயநிதி மீது வழக்கு தொடர வேண்டும் என 262 பிரபலங்கள், ஒய்வுபெற்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதுமட்டுமல்லாது அயோத்தியை சேர்ந்த பரகாம்ச ஆச்சாரியா என்ற ஒரு சாமியார் ஒருவர் உதயநிதி தலையை கொண்டு வருபவருக்கு ரூ.10 கோடி தரப்படும் என்று அறிவித்தார். அது இந்த விஷயத்தை மேலும் பெரிதாக கொண்டு சென்றது. பாஜாகவை சேர்ந்தவர்கள் உதயநிதி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி தமிழ்நாட்டில் மூலை முடுக்கு வரைக்கும் உதயநிதி பேசியிருப்பது பெரும் தீயாய் பரவி வருகிறது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, "தற்கொலை செய்யும் நிலையில் உள்ளதா திமுக? சனாதன தர்மத்தின் மீதான தாக்குதல் முட்டாள்தனமான தேசவிரோதத் தாக்குதல். கருணாநிதியின் ஆட்சி 1990-91ல் கலைந்தது நியாபகம் இருக்கிறதா அதை பாடமாக கற்று கொள்ள வேண்டும்" என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்துஅவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், சுப்பிரமணியன் சுவாமி உதயநிதி மீது வழக்கு தொடர வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியுள்ளார், அதையும் அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.