2024 தேர்தலை சந்திக்க இப்போதே ஆயுதத்தை பட்டை தீட்டுவோம்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

போர்க்களத்திற்கு செல்வதற்கு முன்பு ஆயுதத்தை பட்டை தீட்டுவது போல 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இப்போதே நாம் தயாராக வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். "தேர்தல் நெருங்க நெருங்க மத்திய பாஜக அரசுக்கு பயம் வந்துவிட்டது. எனவே யார் மீது வழக்கு போடலாம், யாரை மிரட்டி சிறையில் அடைக்கலாம் என்று திட்டமிட்டு பழிவாங்கும் செயலில் ஈடுபடுகிறது. ஆனால் இந்த சலசலப்புக்கு எல்லாம் பயந்த இயக்கம் அல்ல திமுக.

மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை. எனவே பாஜகவின் எந்த மிரட்டலையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். தளபதி ஸ்டாலின் சொன்னதை போல் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

போர் களத்திற்கு செல்லும் போது ஆயுதத்திற்கு பட்டை தீட்டுவது எவ்வளவு அவசியமோ அதேபோல் 2024ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் களத்தை சந்திப்பதற்கு நாம் வீரியமுடன் இருக்க வேண்டும். தளபதி ஸ்டாலின் வழியில், அமைச்சர் உதயநிதி, கனிமொழி எம்.பி. ஆகியோர் தேர்தல் களத்தை முன்னெடுத்துச் சென்று பணியாற்றி வருகின்றனர். மோடியின் மிரட்டலுக்கு 2024ல் இந்தியா கூட்டணி முற்றுப்புள்ளி வைக்கும்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தெற்கு மாவட்டத்தில் 100 இடங்களில் திமுக கொடியேற்ற வேண்டும். கலை இரவு, மாரத்தான், பேச்சுப்போட்டி ஆகியவற்றை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும். செப்டம்பர் 4ம் தேதி தூத்துக்குடிக்கு வருகை தரும் திமுக இளைஞரணி செயலரும், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவேண்டும்.

அதைத் தொடா்ந்து தூத்துக்குடி மாணிக்கம் மஹாலில் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 1000 பேருக்கு பொற்கிழி வழங்கப்படவுள்ளது. மாலையில் புதுக்கோட்டையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டங்களில் இளைஞா் அணியினா் திரளாகப் பங்கேற்க வேண்டும்" என்றாா்.

கூட்டத்தில், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டேவிட்செல்வின், மாடசாமி, செந்தூர் மணி, மாவட்ட துணை செயலாளர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், பொதுக்குழு உறுப்பினர்கள் இந்திரகாசி, ராஜலட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் பாலசிங், நவின்குமார், ரமேஷ், முத்து முகம்மது, சுடலை, ரவி, ஜோசப், கோட்டாளம், இசக்கிபாண்டியன், பாலமுருகன், ஜெயக்கொடி, சுப்பிரமணியன் உள்பட பலா் பங்கேற்றனா்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com