வெச்சுக்கோ.. வெச்சுக்கோ.. களைகட்டும் திருவிழா சூதாட்டம்.. பணத்தை இழக்கும் பாமரர்கள்!

சூர்யா பட பாணியில் கரூரில் அமோகமாக நடைபெறும் லங்கர் கட்டை சூதாட்டம், பணத்தை இழந்து நடுத்தெருவில் நிற்கும் பாமர மக்கள்.
லங்கர் கட்டை சூதாட்டம்
லங்கர் கட்டை சூதாட்டம்

புகழ்பெற்ற கரூர் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கரூர் அமராவதி ஆற்றிலும், பள்ளபட்டி உருஸ் திருவிழாவை முன்னிட்டு வேலம்பாடி நங்காஞ்சி ஆற்றிலும் வெகுஜோராக லங்கர் கட்டை சூதாட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்போது அரவக்குறிச்சி உருஸ் திருவிழாவில் நடக்கும் இடங்களிலும் இளைஞர்கள் இந்த சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள்.

இது குறித்து அந்தச் சூதாட்டம் குறித்து விபரமறிந்தவர்கள் கூறுவது ரொம்பவுமே சுவாரஸ்யமாக இருக்கிறது,

"படுக்க வசமாக வைத்திருக்கும் ஒரு போர்டில், ஆறு கலர்கள் ஆறு கட்டங்களில் இருக்கும். சூதாட்டம் நடத்துபவர் ஆறுமுகங்கள் உள்ள சின்ன விரல் அடக்கமுள்ள கட்டையில் இந்த ஆறு கலர்களையும் வரைந்து வைத்திருப்பார். இதே போல் மூன்று கட்டைகளை ஒரு டப்பாவில் போட்டு குலுக்கி டப்பாவை மூடி வைத்துவிடுவார்.

சூதாடுபவர்கள் போர்டில் உள்ள சின்னங்களில் பணத்தை வைக்க ஆரம்பிப்பார்கள். சில நிமிடங்களில் டப்பா மேலே தூக்கப்படும், கட்டையில் இருக்கும் கலர்களில் பணம் வைத்திருந்தவர்கள் அனைவருக்கும் வைத்திருந்த பணம் டபுளாக அந்த இடத்திலே பணம் செட்டில் செய்யப்படும். கட்டையில் இல்லாத கலர்களில் உள்ள பணத்தை சூதாட்டக்காரர் கம்பெனிக்கு என வாரி சுருட்டிக்கொள்வார்.

இதுதான் இந்த சூதாட்டத்தின் ரூல்ஸ். இந்த விளையாட்டில் எந்தளவிற்கு கணக்கு போட்டு ஆடினாலும் நூற்றுக்கு 95 ஆட்கள் பணம் இழப்பது உறுதி, திருவிழாவை கண்டு கழிக்க விருந்தாளியாக வந்தவர்கள், பணத்தை இழந்து பேருந்துக்கு காசில்லாமல், விருந்தினர் வீட்டிலேயே கையேந்திய சம்பவம் ஏராளம். லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வீடு, வாசலை விற்றவர்கள் ஏராளம். சிலர் தற்கொலை கூட செய்த சம்பவங்கள் இருக்கிறது.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எளிதாக இந்த சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதால் இந்த சூதாட்டத்திற்கு காவல்துறை கடுமையான நடவடிக்கையெடுத்து திருவிழாக்களில் இவைகளில் நடைபெறாதாவாறு பார்த்துக் கொண்டிருந்தனர். கொரோனாவால் நடைபெறாத திருவிழாக்கள் இப்போது வெகு விமர்சையாக கொண்டாப்படுவதால் மீண்டும் இந்த களத்திற்கு வந்துவிட்டது லங்கர் கட்டை.

சூதாட்டம் நடத்துபவர், ஆள் நடமாட்டம் இல்லாத போலீஸ் எளிதாக வராத இடங்களை தேர்வு செய்து வாட்ஸ் அப்பில் 25 முதல் 50 பேர்களுக்கு மட்டுமே ரகசிய தகவல் கொடுப்பார். இரவு 10 மணிக்கு மேல் அந்த இடத்தில் அனைவரும் கூடுவார்கள், ஆட்டம் ஆரம்பமாகும். மூன்று அடுக்கு பாதுகாப்புடன் நடக்கும். சூதாட்டம் நடக்கும் இடத்திலிருந்து கால் கிலோ மீட்டருக்கு ஒருவர் என மூண்று இடத்தில் ஆட்கள் நிறுத்தி வைத்திருப்பார்கள்.

அடையாளம் தெரியாத வெளியாட்கள் வந்தாலோ, போலீசோ வந்தால் உடனே இங்கு தகவல் கொடுக்கப்பட்டு விடுவதால் சூதாட்டம் நடத்துபவர்கள் எச்சரிக்கையாகி விடுகின்றனர். இந்த அண்டு கரூர் அமராவதி ஆற்றங்கரையிலும், வேலம்பாடி நங்காஞ்சி ஆற்றங்கரையிலும் நடந்தது. ஒரு கட்டத்தில் நூறு ரூபாயில் ஆரம்பித்து லிமிட் ஐயாயிரம் ரூபாய் என்று நிர்ணயிக்க பட்டு நடந்தது.

தொடர்ச்சியாக ஒரு சின்னம் வெற்றிபெறுமாறு டப்பாவை குலுக்குவார்கள். அந்த சின்னத்தில் அதிகப்படியான பணம் இருக்கும் சமயம் குலுக்கலில் அந்த சின்னம் விழாதவாறு டெக்னிக்காக குலுக்கி அத்தனை பணத்தையும் வாரி எடுத்துக்கொள்வார் சூதாட்டம் நடத்துபவர். இந்த விளையாட்டில் ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் ரூபாய் கூட இழந்தவர்கள் உண்டு. தோற்றவர்கள் தோற்ற பணத்தை பிடிக்க வேண்டும் என்று வட்டிக்கு பணம் வாங்கி வந்து விளையாடுவார்கள் மீண்டும் தோற்றுப்போவார்கள். இந்த லங்கர் கட்டை விளையாட்டால் பல குடும்பங்கள் சீரழிந்துவிட்டது. இப்போது அரவக்குறிச்சியில் திருவிழா கடைகளுக்கு மத்தியில் இந்த சூதாட்டம் நடப்பதுதான் அதிர்ச்சி" என்று அவர் கூறினார்.

போலீஸ் தரப்பில் இதுகுறித்து இனி திருவிழா கடைகளுக்கு மத்தியில் சோதனை நடத்தி சூதாட்டம் நடக்க விடாமல் செய்கிறோம். மேலும் சூதாட்டம் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கிறோம் என்கிறார்கள் உறுதியாக. பொறுத்திருந்துதான் பார்ப்போமே!

- கரூர் அரவிந்த்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com