கும்பகோணம்: ரூ.6 கோடி லஞ்சம் கேட்டு ரூ.10 லட்சம் அட்வான்ஸ் பெற்ற விவகாரம் - 2 காவல் அதிகாரிகள் மீது வழக்கு

கணேஷ் தனது ஊழியர் மூலமாக தஞ்சாவூரில் ஒரு ரகசிய இடத்தில் வைத்து முன்பணம் கொடுத்துள்ளார்
ரூ.6 கோடி லஞ்சம்
ரூ.6 கோடி லஞ்சம்

கும்பகோணம் பா.ஜ.க-வைச் சேர்ந்த மோசடி நிதி நிறுவன அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.6 கோடி லஞ்சம் கேட்ட விவகாரத்தில் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்களான கணேஷ், சாமிநாதன் ஆகியோர் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். மேலும் தேசிய கட்சியான பா.ஜ.க-வின் முக்கிய பிரமுகர்களாக வலம் வந்தனர்.

இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறினார்கள். இதனை உண்மை என்று நம்பிய பொதுமக்கள் ஏராளமானோர் அந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர்.

ஆனால் பொதுமக்கள் முதலீடு செய்த சுமார் ரூ. 600 கோடியை சுருட்டிக்கொண்டு ஹெலிகாப்டர் சகோதரர்கள் தலைமறைவாகினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இருவர் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் புகார் செய்தனர். இதையடுத்து மோசடி செய்த பா.ஜ.க சகோதரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர்.

இதனிடைய கடந்த 2021 ஆம் ஆண்டு கணேஷ் தனது தாயாரின் சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.

அப்போது தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலக தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பணிபுரிந்த சோமசுந்தரம், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகிய 2 பேரும் கோயம்புத்தூரில் இருந்த கணேஷிடம், பொதுமக்கள் கொடுத்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.1 கோடி மற்றும் மற்ற முதலீட்டாளர்கள் கொடுக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.5 கோடி என மொத்தம் ரூ.6 கோடி லஞ்சம் தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கணேஷ் முன்பணமாக ரூ.10 லட்சத்தை தனது ஊழியர் மூலமாக தஞ்சாவூரில் ஒரு ரகசிய இடத்தில் வைத்து கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

இந்த தகவல் தற்போது வெளியே வரதொடங்கியது. காவல் துறையினர் 2 பேர் லஞ்சம் வாங்கிய விவகாரம் பற்றி தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு பல்வேறு புகார்கள் சென்றன.

இதனைத்தொடர்ந்து சோமசுந்தரம், கண்ணன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இதுதொடர்பாக அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் பரிந்துரை செய்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com