அரசு நிர்ணயத்தைப் பயணச் சீட்டுத் தொகையை விடத் தனியார் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல் செய்ததால் பயணிகள் பேருந்தைச் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து தஞ்சை நோக்கிச் சென்ற தனியார் பேருந்திலிருந்த பயணிகள் டிக்கெட் எடுத்துள்ளனர். அப்பொழுது அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடப் பயணிகளிடம் கூடுதலாக 3 ரூபாய் தொகை ஏன் வாங்குகிறீங்க என ஒரு பயணி நடத்துநரிடம் கேட்டுள்ளனர். அதற்குப் பேருந்து ஓனரிடம் கேளுங்கள் என்று திமிராகப் பதில் கூறியுள்ளார். பயணிகள் உரிமையாளரின் செல்போன் நம்பரை வாங்கி தொடர்பு கொண்டு கேட்ட போது, ”மிஷின் பழுதானால் கூடுதலாகக் கட்டணம் வாங்குகிறார்கள் விரைவில் சரி செய்து விடுவோம்” என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் பேருந்தை நிறுத்தி சாலையில் அமர்ந்து கொண்டு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த திடீர் போராட்டத்தால் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்துக்குப் பாதிக்கப்பட்டது.