கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள குருபட்டி கிராமத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் கடந்தாண்டு ஜனவரியில் குருபட்டியை சேர்ந்த கட்டிட பொறியாளர் மோகன்பாபு ( 24) என்பவரை குருபட்டியை சேர்ந்த திலக் (25) மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.
இதனையடுத்து பிணையில் வெளியே வந்த திலக், கொலை செய்யப்பட்ட மோகன்பாபுவின் தந்தை திம்மராயப்பாவால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திகிரி போலிசில் புகார் அளித்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஒசூர், பெரியார் நகரில் டீ குடித்துக் கொண்டிருந்த திலக்கை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தலைமறைவாகினர். இந்த விவகாரத்தில் மத்திகிரி காவல் ஆய்வாளர் சாவித்திரி, உதவி காவல் ஆய்வாளர் சிற்றரசு இருவரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி மாவட்ட எஸ்பி பணியிடை நீக்கம் செய்தார்.
இந்த கொலைக்குறித்து ஒசூர் நகர போலிசார் விசாரணை மேற்கொண்டதில் மகனை கொலை செய்த இளைஞரை தந்தையே கூலிப்படை வைத்து தீர்த்து கட்டியது தெரியவந்துள்ளது.
பின்னர் உயிரிழந்த மோகன்பாபுவின் தந்தை திம்மராயப்பாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், ஒரே மகனை கொலை செய்துவிட்டு கொலையாளி வெளியே சுற்றியதை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாமல் கூலிப்படையை சேர்ந்த பலரை நாடியபோது அவர்கள் கொலை செய்ய மறுத்ததாகவும் அதனால் தனது உறவினர்களான சிவக்குமார்(25), வெங்கடேஷ் (24) ஆகியோர் மூலம் திலக்கை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.
இதனால் மத்திகிரியை சேர்ந்த ஜிம் டிரெய்னர் சசிக்குமார் என்பவரை தொடர்புகொண்டு 20 லட்சம் ரூபாய் விலை பேசி முன்பணமாக 2 லட்சம் ரூபாயை வழங்கியதாகவும், சசிக்குமார் மற்றும் திம்மராயப்பா உறவினர்களான சிவக்குமார், வெங்கடேஷ் ஆகியோர் திலக்கை ஒரு மாதமாக பின்தொடர்ந்து வழக்கமாக தினமும் டீ குடிக்கும் டீ கடையில் வைத்து திட்டமிட்டபடி கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
திம்மராயப்பா, சிவக்குமார், வெங்கடேஷ் ஆகிய 3 பேரையும் நகர போலிசார் கைது செய்தனர். மற்றொரு குற்றவாளியான சசிகுமாரை போலீசார் தேடி வந்த நிலையில் சங்ககிரி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். சசிகுமாரை போலீசார் காவலில் எடுத்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு நபர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகனை கொலை செய்த இளைஞரை தந்தையே கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.