கிருஷ்ணகிரி: ஊர் ஏரிக்குள் வந்து விளையாடும் காட்டு யானைகள்- வனத்துறை எச்சரிக்கை

ஏரியின் நடுவே மின்கம்பம் உள்ளதால் மின்வாரியத்தினர் அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர்.
கிருஷ்ணகிரி: ஊர் ஏரிக்குள் வந்து விளையாடும் காட்டு யானைகள்- வனத்துறை எச்சரிக்கை

கிருஷ்ணகிரி அருகே தேவசமுத்திரம் ஏரியில் முகாமிட்டுள்ள 2 காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பஞ்சப்பள்ளி வனப்பகுதியில் இருந்து 2 காட்டு யானைகள் வெளியேறி கடந்த 25-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பகுதிக்கு வந்தன. பின்னர் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரிந்த யானைகளை வனத்துறையினர் காரிமங்கலம் அருகே உள்ள சஞ்சீவராயன் மலைப்பகுதிக்கு விரட்டினர். பின்னர் அந்த யானைகள் கிருஷ்ணகிரி அணை அருகே போலுகுட்டை பகுதியில் முகாமிட்டன. இந்த யானைகளை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் 2 யானைகளும் நெக்குந்தி வழியாக நேற்று அதிகாலையில் கிருஷ்ணகிரி அருகே சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆவின் மேம்பாலம் எதிரே உள்ள தேவசமுத்திரம் ஏரிக்கு வந்தன. இதையடுத்து யானைகள் ஏரியின் நடுப்பகுதிக்கு சென்று உற்சாக குளியல்போட்டு விளையாடின. மேலும் ஏரியின் நடுவே மின்கம்பம் உள்ளதால் மின்வாரியத்தினர் அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர்.

ஏரியில் யானைகள் முகாமிட்டுள்ளதை அறிந்த கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டனர். மேலும் வாகனங்களில் சென்றவர்களும் சாலையோரம் தங்களது வாகனங்களை நிறுத்தி யானைகளை வேடிக்கை பார்த்தனர். இதனால் கிருஷ்ணகிரி- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி தலைமையில் டவுன், தாலுகா போலீசார் அப்பகுதியில் சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

மேலும் உதவி வனபாதுகாப்பு அலுவலர் ராஜமாரியப்பன் தலைமையில் வனச்சரகர்கள் ரவி (கிருஷ்ணகிரி), பார்த்தசாரதி (ராயக்கோட்டை), வனவர்கள் சரவணன், தேவ்ஆனந்த், அண்ணாதுரை, வெங்கடாசலம் உள்ளிட்ட வனத்துறையினர் ஏரியில் இருந்து யானைகள் தேசிய நெடுஞ்சாலைக்கு வராமல் தடுக்க தேவையான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் யானைகளை பாதுகாப்பாக வனப்பகுதிக்கு விரட்டும் பணியை மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,’’2 யானைகளையும் நெக்குந்தி வழியாக சோக்காடி வனப்பகுதி அல்லது கூசுமலை வழியாக மேலுமலை வனப்பகுதிக்கு விரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக நெக்குந்தி, அக்ரஹாரம், அவதானப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரவில் யாரும் வெளியே வர வேண்டாம். மாந்தோட்டத்திற்கு காவலுக்கு செல்ல வேண்டாம். அதிகாலை 7 மணி வரை மல்லிகை பூக்கள் பறிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com