மீன்பிடிக்க சென்ற போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் அருகேயுள்ள மாகாதேவகொல்ல அள்ளி ஊராட்சி பூலாகுட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பன். இவர் சென்னையில் பேக்கரி கடையில் சுவீட் மாஸ்டராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சந்திரிகா விவசாயம் பார்த்துக்கொண்டு தனது இரு குழந்தைகளான ஸ்ரீநிகா(6) மற்றும் அனிருத் (3) ஆகிய இரு குழந்தைகளைக் கவனித்து வந்தார்.
இந்நிலையில் சந்திரிகா, அவரது மாமனார் பாண்டியன் மற்றும் கூலியாட்கள் சிலர் மாதப்பனின் விவசாய நிலத்தில் நெல் அறுவடை செய்து அதனை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்திரிகாவின் குழந்தைகளான ஸ்ரீநிகா, அனிருத் மற்றும் பக்கத்து வீட்டு பையன் சுரேஷ் ஆகிய மூன்று பேரும் பூலாகுட்டை கிராமத்தில் மாரியம்மன் கோவில் முன்பு உள்ள கெங்கப்பன் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
ஸ்ரீநிகா மற்றும் அனிருத் ஆகிய இருவரும் ஒருவர் பின் ஒருவராகத் தண்ணீரில் இறங்கிய நிலையில் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இவர்கள் இருவரும் தண்ணீரில் தத்தளிப்பதைக் கண்ட சுரேஷ் என்ற சிறுவன் கூச்சலிட்டுள்ளார். அதனைக் கண்டு அங்கு திரண்ட கிராம மக்கள் கிணற்றில் மூழ்கிய இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் மூன்று மணிநேர போராட்டத்திற்குப் பின்னர் குழந்தைகள் இருவரையும் மீட்டு போச்சம்பள்ளியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
பின் பிரேதப்பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்த காவல் ஆய்வாளர் பிரபாவதி இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.