ஏரியில் வளர்க்கப்படும் மீன்களுக்கு உணவு வழங்க அதிக செலவுகளை செய்து வந்த மீன் வியாபாரிகள், தற்பொழுது குறைந்த விலையில் மீன்களுக்கு தக்காளியை கொள்முதல் செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளான போச்சம்பள்ளி, அகரம், மருதேரி, பண்ணந்தூர், பனங்காட்டூர், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர்.
கடந்த மாதங்களில் தக்களி விளைச்சல் குறைவாக இருந்ததால் ஒரு கிலோ 50 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையில் விற்பனையானதால் பெரும்பாலான விவசாயிகள் தக்காளி பயிரிட்டனர்.
இதன் பின் தக்காளி செடிக்கு ஏற்ற இதமான காலநிலை நிலவியதால் செடிகளில் தக்காளி நல்ல விளைச்சல் கண்டுள்ள நிலையில் தற்போது ஒரு கிலோ தக்காளி 1 ரூபாய்க்கு கூட வியாபாரிகள் வாங்க முன் வரவில்லை. தற்போது தொடர் மழை காரணமாகவும் தோட்டங்களில் மழை நீர் தேங்கி, தக்காளி செடிகளிலேயே அழுகி வருவதால் தக்காளிகளை பறிக்காமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
மீன் குத்தகை தாரர்கள் தங்களாகவே ஆட்களுக்கு கூலி கொடுத்து, தக்காளியை பறித்து டிராக்டர் மூலம் கொண்டு வந்து ஏரியில் கொட்டி மீன்களுக்கு உணவாக்குகின்றனர்.
மேலும், ஏரியில் வளர்க்கப்படும் மீன்களுக்கு உணவு வழங்குவதில் அதிக செலவுகளை செய்து வந்த மீன் வியாபாரிகள் தற்பொழுது குறைந்த விலையில் மீன்களுக்கு உணவு வழங்க தக்காளி பயன்படும் நிலையில் ஏரியில் மீன் பாசி குத்தகை பெற்றுள்ள குத்தகைதாரர்கள் தக்காளி கொள்முதல் செய்ய முன்வந்துள்ளனர்.
- பொய்கை.கோ.கிருஷ்ணா