குடிநீர் திட்டப் பணிகள் துவங்குவதில் தி.மு.க கட்சியை சேர்ந்த இருதரப்பினர் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் டவுன் பஞ்சாயத்தில் அம்ருத் 2.0 திட்டத்தில் ₹6.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தென்பெண்ணை ஆறு நீரை உறிஞ்சி, கிணறுகள் அமைத்து, மேல்நிலை நீர் தேக்கு தொட்டி மூலம் குடிநீர் ஏற்றி வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி காவேரிப்பட்டினம், அப்பாசாமி நாயுடு தெருவில் தென்பெண்ணை ஆற்றின் ஓரம், மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்க பணிகள் துவங்கப்பட்டு கட்டுமான பொருட்கள் வைக்கக் கூரை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கக் குழி தோண்டப்பட்ட நிலையில் அங்கு குண்டலப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் ரோஜாவின் மகனும், தி.மு.க பிரமுகருமான பாஸ்கர் பணியைத் தடுத்து நிறுத்தியுள்ளார். பணிகள் நிறுத்தப்பட்ட தகவல் அறிந்து தி.மு.க பிரமுகரும், காவேரிப்பட்டினம் டவுன் பஞ்சாயத்துத் தலைவருமான அம்சவேணி சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார். அவரிடம் பாஸ்கர் தகராறு செய்து, தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. பின்னர் இருதரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பாஸ்கர் தன்னுடைய ஆதரவாளர்களான பஞ்சாயத்து ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் பெண்களைச் சம்பவ இடத்துக்கு அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அம்சவேணியை ஒருமையில் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறி பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில் தலைமையில், காவேரிப்பட்டினம் காவல் நிலையம் முன் அம்சவேணி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர். குடிநீர் திட்டப் பணிகள் துவங்குவதில் தி.மு.க கட்சியை சேர்ந்த இருதரப்பினர் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.