நில உரிமையாளருக்கு அடி, உதை -அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் அராஜகம்

நிலத்தின் உரிமையாளர்களான ஒருவர் கால் முறிந்தும், மற்றொருவர் காயங்களுடன் ஒசூர் ஜி.எச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக நிர்வாகி, பாதிக்கப்பட்டவர்கள்
அதிமுக நிர்வாகி, பாதிக்கப்பட்டவர்கள்

தனது உறவினர் வயலுக்கு பாதை வேண்டுமென, பட்டா நிலத்தில் ஜேசிபியுடன் சென்று உரிமையாளர்களை அடித்து உதைத்து அராஜகத்தில் ஈடுபட்ட அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த பாகலூர் ஊராட்சிக்குட்பட்ட வெங்கடராயபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன்(41), கிருஷ்ண மூர்த்தி(38) சகோதரர்களான இவர்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் மூர்த்திகாண் தின்னா என்னும் பகுதியில் உள்ளது.

அதிமுகவை சேர்ந்த வி.டி.ஜெயராம் என்பவர் பாகலூர் ஊராட்சி மன்ற தலைவர், கூட்டுறவு சங்க தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்து செல்வாக்கான நபராக இருந்து வருகிறார்.

ஜெயராமனின் உறவினர்களின் நிலத்திற்கு செல்ல வேண்டுமானால் கிருஷ்ண மூர்த்தி, மணிகண்டன் ஆகியோரின் நிலங்கள் வழியாக தான் செல்ல வேண்டும். எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லாமல் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராம் தனது உறவினர்கள் 10-க்கும் மேற்பட்டோர் மற்றும் ஜேசிபி வாகனத்துடன் வந்து, சகோதரர்களின் பட்டா நிலத்தில் பாதை அமைக்க முயன்றுள்ளார்.

அப்போது நிலத்தின் உரிமையாளர்கள் ஜேசிபி வாகனத்தை தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராம் உள்ளிட்டோர் நில உரிமையாளர்கள் இருவரையும் கட்டை உள்ளிட்டவற்றால் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் நிலத்தின் உரிமையாளர்களான மணிகண்டனுக்கு கால் முறிந்தும், கிருஷ்ணமூர்த்தி காயங்களுடன் ஒசூர் ஜி.எச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மணிகண்டன் கூறுகையில்,”ஏற்கனவே ஊரில் உள்ள நிலத்திலும் அவரது அண்ணன் வீட்டிற்கான பாதை விரிவுப்படுத்த எங்கள் நிலத்தில் 4 அடி வேண்டுமென கேட்டபோது, நாங்கள் மறுத்ததால் திட்டமிட்டு உறவினர்களுடன் இணைந்து தாக்கினார். ஊராட்சி மன்ற தலைவர் என்கிற பதவியை துஷ்பிரயோகம் செய்து எங்களை மிரட்டி வருகிறார்.அதிமுக ஒன்றிய துணை செயலாளராகவும் உள்ள அவர் மீது பாகலூர் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதால், எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும்”என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com