கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் இன்றி சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அவலம் நிலவி வருகிறது. எனவே, வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சூளகிரியை அடுத்த பேரிகை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இதில், சுற்றுவட்டாரத்தில் உள்ள பதினான்கு கிராம மக்கள் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர். இங்கு பெரும்பாலும் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் அவசர முதலுதவி, விஷக்கடி, சிறுவிபத்து காரணமாக ஏற்படும் காயங்கள் போன்றவற்றிற்கான சிகிச்சைகளை பெறுகின்றனர்.
இந்நிலையில், அந்த மையத்தில் ஒரே ஒரு மருத்துவரும் மூன்று செவிலியர்களும் மட்டும் பணியாற்றப்பட்டுள்ளதால் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாத நிலை இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சுகாதார மையத்தை சுற்றிலும் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட சிரஞ்சிகள், காயங்களுக்கு போடப்பட்ட பஞ்சுகள் மற்றும் ஏராளமான மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு இருக்கிறது. அவ்வப்பொழுது முறையாக இந்த கழிவுகளை அகற்றாத காரணத்தால் நோய் தொற்று பரவும் அபாயமும் நிலவுகிறது. நோயாளிகளின் பயன்பாட்டிற்காக கட்டி வைக்கப்பட்டுள்ள கழிப்பறைகள் எப்பொழுதும் பூட்டியே கிடப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இயற்கை உபாதைகளை கழிக்க இயலாமல் நோயாளிகள் மற்றும் மக்கள் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல வளாகத்தில் திறந்த வெளியிலே உள்ள கழிவு நீர் கால்வாய்கள் கொசு உற்பத்தி மையமாக மாறி உள்ளது. இதோடு மட்டுமல்லாது முறையாக அப்புறப்படுத்தி பராமரிக்காத நிலையில் புதர்கள் மண்டி கிடப்பதால் விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் உள்ளதாக மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே இந்த அவல நிலையை அகற்றி விடியலை கொண்டுவரும் நோக்கில் உடனடியாக அரசு கவனம் செலுத்தி அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து முறையாக பராமரித்து சுகாதார மையத்தை தரமான மையமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.
-பொய்கை. கோ.கிருஷ்ணா