கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நீங்கதரனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். அதே பகுதியைச் சேர்ந்தவர் சாந்தம்மா.
இவர்கள் தங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் தக்காளியும் ஒரு ஏக்கர் நிலத்தில் வெள்ளரியையும் சாகுபடி செய்திருந்தனர். அதேப்போல 20க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் தங்களுடைய தோட்டத்தில் வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் கூட்டம் விவசாயிகள் பயிரிட்டிருந்த தக்காளி, வெள்ளரி மற்றும் வாழை மரங்களை சாப்பிட்டும், சேதப்படுத்தியும் சென்றுள்ளது.
இன்னும் ஓரிரு நாட்களில் தக்காளி மற்றும் வெள்ளரிக்காய்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் காட்டு யானைகள் பயிர்களைச் சேதப்படுத்தியது விவசாயிகளின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சந்தைகளில் தக்காளி அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் சேதமடைந்துள்ள தக்காளி, வெள்ளரி மற்றும் வாழை ஆகியவற்றின் மதிப்பு சுமார் 10 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கணேஷ் ரெட்டி மற்றும் விவசாயிகள் சேதமடைந்த விளைநிலங்களை பார்வையிட்டனர்.
பின்னர், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி விளைநிலத்தில் முட்டிப் போட்டு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.