100 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்தவரின் மணிமண்டபத்திற்கு 2 ஏக்கர் நிலம் கொடுக்க திமுக அரசு மறுப்பது ஏன்? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”பல நூற்றாண்டுகள் தொன்மை வாய்ந்த புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னராக, புதுக்கோட்டை நகரின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது நாம் அறிந்ததே. புதுக்கோட்டை மக்களின் நலனுக்காக, விவசாயம், போக்குவரத்து, நீர்ப்பாசனம் என பல்வேறு துறைகளில் வசதிகளை ஏற்படுத்தித் தந்தவர் மன்னர் ராஜகோபால தொண்டைமான்.
புதுக்கோட்டை சமஸ்தானத்தை, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் கோரிக்கையை ஏற்று இந்தியக் குடியரசுடன் இணைக்க ஒப்புக்கொண்ட மன்னர் ராஜகோபால தொண்டைமான், அவரது அரச கருவூலத்திலிருந்து, 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை நாட்டுக்கு வழங்கியவர்.
1974ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது, புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அமைக்க 100 ஏக்கர் அளவுள்ள நிலத்தையும், தன் சொந்த அரண்மனையையும் வழங்கிய பெருமைக்குரியவர்.
அத்தகைய பெருமை வாய்ந்த மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு நினைவிடம் அமைக்க, ஆட்சியர் அலுவலகம் அமைந்திருக்கும் அவர் தானமாகக் கொடுத்த 100 ஏக்கர் நிலத்திலிருந்து, இரண்டு ஏக்கர் நிலத்தை, நினைவிடம் அமைக்க வழங்க வேண்டும் என்ற மன்னர் குடும்பத்தின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்காமல், வெறும் 35 சென்ட் நிலம் மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
நாட்டுக்காகவும், புதுக்கோட்டை மக்களுக்காகவும் தனது உடைமைகள் அனைத்தையும் கொடுத்த மன்னர் ராஜகோபால தொண்டைமானின் வரலாற்றை, இன்னும் பல தலைமுறைகளுக்குக் கொண்டு செல்ல வேண்டிய கடமை, தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
மன்னர் தானமாகக் கொடுத்த 100 ஏக்கர் நிலத்தில் இருந்து, அவருக்கு நினைவிடம் அமைக்க 2 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்வதில், தமிழக அரசுக்கு என்ன பிரச்சினை உள்ளது என்பது தெரியவில்லை.
உடனடியாக, தமிழக அரசு தனது வீண் பிடிவாதத்தை விட்டு விட்டு, தமிழகத்தின் பெருமை மிகுந்த மன்னர்களில் ஒருவரான, மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு நினைவிடம் அமைக்க, ஆட்சியர் அலுவலகம் அமைந்திருக்கும் நிலத்தில், 2 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றும், மன்னர் நினைவிடப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் வலியுறுத்தி உள்ளார்.