முகமூடி அணிந்து கடத்தல்: போலீசாரை அலைக்கழித்த பள்ளி மாணவர்கள்- நடந்தது என்ன?

காரைக்காலில் வீட்டுப்பாடம் எழுதாததால் முகமூடி அணிந்த நபர்கள் கடத்தியதாக நாடகம் போட்டு போலீசாரை கலங்கடித்த மாணவர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர் கடத்தல்
மாணவர் கடத்தல்

காரைக்காலைச் சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் அப்பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று காலை சகோதரர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளனர். ஆனால் பள்ளிக்கு தம்பி மட்டும் சென்றதனால் ஆசிரியர்களிடம் அந்த சிறுவன், "நானும், அண்ணனும் பள்ளிக்கு புறப்பட்டு வருகின்றபோது கலெக்டர் அலுவலகம் அருகே முகமூடி அணிந்த நபர்கள் அண்ணனை கடத்திச் சென்றுவிட்டனர்" என்று சொல்ல அதிர்ச்சியான ஆசிரியர்கள் இது குறித்து காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

உடனடியாக சீனியர் எஸ்.பி மணீஷ் பள்ளிக்கு விசாரணை நடத்துவதற்காக வந்தார். அப்போது அந்த மாணவர், "முகமூடி அணிந்து கருப்பு நிற ஆம்னி காரில் வந்த மூன்று பேர் கத்தியை காட்டி அண்ணனை கடத்திச் சென்றுவிட்டனர்" என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து பரபரப்பான போலீசார் காரைக்கால் மாவட்டத்தின் 7 எல்லைகளையும் சீல் வைத்து எஸ்.பி சுப்பிரமணியம் தலைமையிலான போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் அருகிலுள்ள நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டு கடத்தி சென்ற மாணவரை தேடும் பணி தொடங்கியது.

இந்நிலையில் காரைக்காலிலிருந்து கருக்களாச்சேரி செல்லும் வழியில் ஆற்றுப்பாலம் அருகே நின்று கொண்டிருந்த மாணவரை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த மாணவர், "முகமூடி அணிந்த மூன்று பேர் என்னை தூக்கிகொண்டு காரில் சென்றதோடு, என்னை செல்போனில் புகைப்படம் எடுத்து யாருக்கோ அனுப்பிவைத்துவிட்டு பேசினர். எனக்கு பயமாக இருந்தது. பின்னர் ஒரு கால்வாய் அருகே என்னை தள்ளிவிட்டு சென்றுவிட்டனர்" என்று கூறியுள்ளார்.

மாணவர் கூறியது குறித்து போலீசாருக்கு சிறிது சந்தேகம் எழுந்ததனால், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் அனைத்தையும் ஆய்வு செய்தனர். இதில் அப்படி ஒரு சம்பவமோ, வாகனமோ பதிவாகததால் இந்த சம்பவம் பொய் என்று உறுதிசெய்தனர்.

கடத்தல் நாடகமாடிய பள்ளி மாணவர்கள்
கடத்தல் நாடகமாடிய பள்ளி மாணவர்கள்

இதனையடுத்து சகோதரர்கள் இருவரிடமும் மீண்டும் விசாரித்தபோது, "நேற்று முன்தினம் வீட்டுப்பாடம் எழுதாததால் பெற்றோரை அழைத்துவரச் சொல்லி ஆசிரியர் கூறினார். பெற்றோரிடம் சொல்லவும் பயமாக இருந்தது. அதனால் இப்படியொரு கடத்தல் நாடகத்தை நடத்தினோம்" என்று சொல்ல அதன் பின்னர்தான் போலீசார் நிம்மதியடைந்தனர். பின்னர் பெற்றோர் முன்னிலையில் அந்த மாணவர்களுக்கு இதுபோல் நடந்து கொள்ளக்கூடாது என்று போலீசார் அட்வைஸ் செய்து அனுப்பிவைத்தனர்.

அண்ணனும், தம்பியும் சேர்ந்து ஒரு பயங்கர கடத்தல் நாடகம் நடத்தி நான்கு மாவட்ட போலீசாரையும் அலற விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- ஆர்.விவேக் ஆனந்தன்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com