கோடை விடுமுறையை நண்பர்களுடன் சேர்ந்து சிற்றாறு அணைப்பகுதியில் நீராடி மகிழ வந்த கேரளாவை சேர்ந்த இளைஞர் தண்ணீரில் மூழ்கி மாயமானது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து விடுமுறையை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், குமரி மாவட்ட தமிழக - கேரள எல்லை பகுதியான நெட்டா பகுதியில் அமைந்துள்ள சிற்றாறு 2 அணைக்கட்டு பகுதிக்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம்.
இந்த பகுதிக்கு ஏராளமான போதை ஆசாமிகளும் வந்து ஆபத்தை உணராமல் போதையில் அணைநீரில் இறங்கி நீராடுவது வழக்கம்.
இதனால், இந்த பகுதியில் பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெற்று வரும் நிலையிலும் கூடுதலாக போலீசார் கண்காணிப்பு இல்லாததால் போதை ஆசாமிகள் மற்றும் இளைஞர்கள் பெரும்பாலும் விரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் போதை ஆசாமிகள் இங்கு குவிந்து மது விருந்து உள்ளிட்டவைகளுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு அணைநீரில் இறங்கி நீராடினர்.
இதற்கிடையே, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த வழிச்சால் பகுதியை சேர்ந்த பிரதீப் என்ற இளைஞர் அவரது நண்பர்கள் 4 பேருடன் சிற்றாறு அணைப்பகுதிக்கு வந்து அணைநீரில் இறங்கி குளித்து கொண்டிருந்த போது, பிரதீப் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளார்.
இதனை கண்ட சக நண்பர்கள் சத்தம் போட அருகாமையில் குளித்து கொண்டிருந்த ஒருசிலர் அவரை தேடி பார்த்துள்ளனர். ஆனால் அவரை காணாததால் களியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
தகவலறிந்த போலீசார் குலசேகரம் தீ அணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து விட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீ அணைப்பு துறையினர் தண்ணீரில் மூழ்கி மாயமான பிரதீப்பை தேடினர். பல மணி நேரம் தேடியும் மூழ்கி போன நபரை கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும், அந்த பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் தீயணைப்பு துறையினர் தேடும் பணியை இடையில் நிறுத்தி நாளை மீண்டும் தேடலாம் என்று கூறி சென்றனர்.
இதற்கு முன்பு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இந்த பகுதிக்கு சுற்றுலா வந்த கேரளாவை சேர்ந்த ஒருவர் தண்ணீரில் மூழ்கி பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.