சென்னை அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்யும் தரகர் வருகை தந்திருப்பதாக அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் தனம்மாள் தலைமையிலான போலீசார் மாறுவேடத்தில் ரயில் நிலையம் சுற்றிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் சந்தேகத்துக்கு இடமான வகையில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை நோட்டமிட்ட போலீசார் அவரிடம் சென்று பேச்சு கொடுத்த போது அவர் கஞ்சா வியாபாரி என்பதும், அவரது பையில் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது.
அவரை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த ஷாஜீர் (24) என்பதும், இவர் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து அம்பத்தூரில் பணிபுரியும் வடமாநில வாலிபர்களுக்கு விநியோகம் செய்ததும் தெரிய வந்தது. மேலும் அவர் பையில் வைத்திருந்த 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.