கேரளா மாநிலம் பத்தனாபுரம் பகுதியை அடுத்த பாடம் பகுதியை சார்ந்தவர் நவ்ஷாத். நூறநாடு என்னும் பகுதியை சேர்ந்தவர் அப்சானா. இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
நவ்ஷாத் மீன் விற்பனை மற்றும் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். மனைவி, குழந்தைகளுடன் அடூர் - பருத்திப்பாறா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நவ்ஷாத் திடீரென காணாமல் போய் உள்ளார்.
இதை அடுத்து குடும்பத்தார் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி கூடல் காவல் நிலையத்தில் நவ்ஷாத் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து நவ்ஷாத்தை தேடி வந்துள்ளனர். ஆனாலும் போலீசாரால் நவ்ஷாத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு கூடல் காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் அழைத்த அப்சானா அடூர் பகுதியில் காணாமல்போன தனது கணவன் நவ்ஷாத்தை பார்த்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார்.
மேலும் கணவனை பார்த்ததாக கூறிவிட்டு ‘ஏன் அவரை வீட்டுக்கு அழைத்து வரவில்லை?’ என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. மேலும் அப்சானா கூறியதை வைத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர். அதில் எதிலும் நவ்ஷாத் இல்லை என்பது தெரியவந்தது.
இதை அடுத்து போலீசாருக்கு அப்சானா மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் காவல் நிலையம் அழைத்து வந்து அப்சானாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின் ஒரு கட்டத்திற்கு பிறகு கணவனை கொன்று புதைத்ததாக அப்சானா வாக்குமூலம் அளித்தார்.
மேலும் கணவனை கொன்ற பிறகு உடலை வீட்டுக்குள் புதைத்ததாகவும், எரித்து சாம்பலை ஆற்றில் கலக்கியதாகவும், அருகிலுள்ள சர்ச் கல்லறையில் புதைத்ததாகவும் மாற்றி மாற்றி கூறியுள்ளார்.
இதை அடுத்து கடந்த 3 நாட்களாக இவர்கள் தங்கிய வாடகை வீட்டிற்கு சென்று அப்சனா கூறிய இடங்களில் போலீசார் தோண்டி பார்த்தும் உடலின் பாகங்கள் எதுவும் சிக்கவில்லை.
அதுபோல அனைத்து காவல் நிலையங்களுக்கும் இவரது புகைப்படம் அனுப்பி இந்த நபரை குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
போலீசாரும் நவ்ஷாத் கொலை செய்யப்பட்டுள்ளார் என உறுதியாக நம்பினர். உடல் பாகங்கள் எதுவும் கிடைக்கவும் இல்லை என்பதால் செய்வதறியாது போலீசாரும் குழம்பி இருந்த நிலையில் திடீர் திருப்பமாக இறந்ததாக கூறப்படும் நவ்ஷாத் இன்று உயிருடன் இடுக்கி அருகே தொடுபுழாவில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்தது நவ்ஷாத் கூறுகையில், ‘மனைவி அப்சானாவுக்கு பயந்துதான் ஊரைவிட்டு சென்றேன். என்னை தொடர்ந்து தாக்கி வந்தார். அவரால் வரவழைக்கப்பட்ட சிலர் அடிக்கடி தாக்கியும் உள்ளனர்.
உயிருக்கு பயந்துதான் வீட்டை விட்டு ஓடினேன்’ என்று நவ்ஷாத் கூறியுள்ளார். அப்போது போலீசார் ‘மனைவியுடன் செல்ல விருப்பமா?’ என்று கேட்டதற்கு ‘ஐயோ வேண்டாம்’ என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஒன்றரை வருடமாக கணவனை போலீசார் தேடியும் எந்த ஒரு விவரமும் கிடைக்கவில்லை.
அதனால்தான் இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியதாக அப்சானா கூறியதாக தெரிகிறது. கேரளாவில் கணவனை மனைவி கொன்று புதைத்ததாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் 3 நாட்களுக்கு பிறகு கணவன் உயிரோடு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.