ஒரு வாரத்திற்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தம்பதியர் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் அருகே செறுபுழா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆன நிலையில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கணவனால் கைவிடப்பட்ட இவர் கடந்த 16ம் தேதி ஷாஜி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். ஷாஜிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஷாஜி தனது மனைவியிடம் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல் வேறொரு திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், இவரது வீட்டுக் கதவு காலையில் நீண்ட நேரமாகியும் திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது ஷாஜி ,ஸ்ரீஜா அவர்களின் மூன்று பிள்ளைகளும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார் 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடந்த சில நாட்களாக ஷாஜிக்கும், ஸ்ரீஜாவுக்கும் இடையே தொடர்ந்து குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் மன உளைச்சலில் இருந்த அவர்கள் மூன்று பிள்ளைகளையும் மேல் மாடிக்கு அழைத்துச் சென்று தூக்குப் போட்டு கொலை செய்த பின்பு இருவரும் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.