தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்களை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஸ்மார்ட் வகுப்பறை, விளையாட சறுக்கு மரம், பண்டிகைகள், பருவகாலங்கள், மனித உடற்கூறுகள், காய்கறிகள், பழங்கள், விலங்குகள், உள்ளிட்டவற்றை மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் தனியார் பள்ளிக்கு இணையாக அங்கன்வாடிகளில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
இவற்றை மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பார்வையிட்டனர். இதில் காட்சிப் படுத்தப்படு இருந்த பறவைகள், பழங்கள் பெயர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் இருந்தன. விலங்கு மற்றும் காய்கறிகளில் தமிழ் எழுத்து இல்லாமல் ஆங்கிலம் மற்றும் இந்தி எழுத்துக்களே இருந்தன.
இதையடுத்து, "இது நம்முடைய மாநகராட்சி இங்கு கலைஞர் கருணாநிதி படமும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படமும் வைக்க வேண்டும். நாளை நான் வந்து பார்ப்பேன், இனி புதிதாக திறக்கவுள்ள அனைத்து கட்டிடங்களிலும் இரண்டு பேர் புகைப்படங்களும் வைக்க வேண்டும்" என மேயர் சண்.ராமநாதன் அங்கன்வாடி பணியாளர்கள் உத்தரவிட்டுள்ளார்.