'கட்டபொம்மன் கோட்டையா?' - அரசியல்வாதிகள், அதிகாரிகளின் அதிர்ச்சி சென்டிமெண்ட்

பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு வந்து கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிப்பவர்களின் பதவி பறிபோகும் என்கிற ஒரு சென்டிமென்ட் இருப்பதால் அரசியல்வாதிகள் யாரும் இந்த பக்கம் வரவில்லை என கூறப்படுகிறது.
கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை செலுத்திய அதிகாரிகள்
கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை செலுத்திய அதிகாரிகள்

தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை அமைந்துள்ளது. கட்டபொம்மன் வழிபட்ட வீரசக்க தேவி கோயில் இந்த கோட்டை வளாகத்தில் இருக்கிறது.

கட்டபொம்மனின் வம்சா வழியினரால் வருடந்தோறும் இந்த கோவிலில் திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது.கோவில் திருவிழாவை முன்னிட்டு கோட்டையில் இருக்கும் கட்டபொம்மன் சிலைக்கு அரசு அரசு சார்பில் மரியாதை செலுத்துவது வழக்கம்.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு வந்து கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிப்பவர்களின் பதவி பறிபோகும் என்கிற ஒரு சென்டிமென்ட் இருக்கிறது. அதனால் அரசியல்வாதிகள் யாரும் இங்கே தலை வைத்துக் கூட படுப்பதில்லை. நேற்று நடந்த திருவிழாவின் போது அது மீண்டும் அரங்கேறி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். கோட்டை இருக்கும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் எம்.எல்.ஏ திமுகவைச் சேர்ந்த சண்முகையா. இந்த மூவரும் நேற்று கோட்டை பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் இருக்கிறது. இந்த தொகுதியைச் சார்ந்த எம்.எல்.ஏ கடம்பூர் ராஜு முன்னாள் அமைச்சர் ஆவார். அவரும் இந்த பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.

அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி நவீன் பாண்டியன் ஆகியோர் மட்டுமே சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அரசியல்வாதிகள் போலவே மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜும் அந்த பக்கம் வராமல் பார்த்துக் கொண்டார்.

செண்டிமெண்ட்களுக்கு அப்பாற்பட்டவரகள் தானே தி.மு.க-வினர். அப்புறம் ஏன் கட்டபொம்மன் சிலையை பார்த்து பயம்? தி.மு.க-வினரிடம் கேட்டோம். "பயம் எல்லாம் ஒன்றும் இல்லை. இரண்டு அமைச்சருக்கும் வெவ்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் இருந்தது. அதனால் அவர்களால் வர முடியவில்லை" என்று சமாளித்தனர்.

-எஸ்.அண்ணாதுரை

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com