கரூரில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் ராட்டினங்கள் அமைக்கக்கூடாது என நகராட்சி ஆணையரிடம் தி.மு.க கவுன்சிலர்கள் மனு அளித்துள்ளனர்.
கரூர் மாவட்டம், பள்ளபட்டியில் வரும் 6ம் தேதி முதல் 4 நாட்களுக்கு உருஸ் திருவிழா நடைபெறுகிறது. இந்த உருஸ் திருவிழாவை முன்னிட்டு ராட்டினங்கள், கடைகள் அமைத்துக்கொள்ள நகராட்சி சார்பில் ஏலம் விடப்பட்டது.
அஸ்கர் அலி என்பவர் வரிகள் உட்பட ரூ.16 லட்சத்திற்கு ஏலம் எடுத்திருந்த நிலையில், கடைகள் மற்றும் ராட்டினங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் நகராட்சி கவுன்சிலர்கள் சர்மிளா பானு, அலிமாபீவி, ராபியா ஆப்ரின் ஆகியோர் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சார்பாக உருஸ் திருவிழாவில் நடக்கும் முறைகேடுகள் பற்றி நகராட்சி ஆணையரிடம் புகார் மனு கொடுத்தார்கள்.
புகார் கொடுத்த கவுன்சிலர் சர்மிளா பானுவிடம் பேசினோம். “சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த உரூஸ் திருவிழாவில் கொலம்பஸ் என்கிற ராட்டினம் சுற்றிக்கொண்டிருக்கும் போது ராட்டினம் கழன்று விபத்து ஏற்பட்டது.
கரூர் மாரியம்மன் திருவிழாவின் போது ராட்டினம் அறுந்து விழுந்து பலர் பலியானார்கள். நிலைமை இப்படியிருக்க, எங்கள் ஊர் உருஸ் திருவிழா நடக்கும் மைதானம் நங்காஞ்சி ஆற்றின் அருகாமையில் இருக்கிறது. இந்த இடத்தில் மணலில் தன்மையை அறிந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் ராட்டினம் அமைக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு நூறு சதவிகித பாதுகாப்பு தேவை. விபத்து ஏற்பட்ட பின்பு இது பற்றிப் பேசி பயனில்லை. நாளை முதல் புயல் மழை இருப்பதால் ராட்டினங்களின் உறுதி தன்மையையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும்.
மேலும் பொருட்காட்சியில் கடை நடத்துபவர்களிடமும், கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துபவர்களிடமும் நகராட்சி நிரணயித்த கட்டணத்தை விட நூறு மடங்கு அதிகக் கட்டணம் கேட்கிறார்கள். அதனால பல வெளியூர் நிகழ்ச்சி நடத்துபவர்கள் வந்த வழியே திரும்பி சென்றுவிட்டார்கள்.
நகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகக் கட்டணம் வாங்கும் போது, அவர்கள் பார்வையாளர்கள் நுழைவு கட்டணத்தைப் பல மடங்கு கூட்டுவார்கள் அது பொதுமக்களின் தலையில்தான் விடியும். இதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும். பொதுமக்கள் பாதிக்காத வகையில் நகராட்சி நிர்வாகம் உருஸ் திருவிழாவை கண்காணிக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்திருக்கிறோம், நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர், எங்கள் மாவட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோரிடம் புகார் கொடுப்போம்” என்றார்.
இதுபற்றி நகராட்சி ஆணையர் குமரனிடம் பேசினோம்,”கவுன்சிலர்கள் கொடுத்த புகார் மனுவை ஆய்வு செய்து ராட்டினங்கள் போடப்பட்டிருக்கும் இடங்கள் மணல் பரிசோதனை செய்து, கம்பங்கள் உறுதியாகவும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தில்லாத வகையில் பாதுகாப்பானதாக இருக்கிறதா என்று ஆய்வு செய்வேன். மேலும் வியாபாரிகளிடம் அதிகக் கட்டணம் வசூல் செய்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என்றவர், இந்த ஆண்டுப் பொதுமக்களுக்காக இரண்டு மொபைல் டாய்லட் வசதி நகராட்சி சார்பாகச் செய்தி கொடுத்திருக்கிறோம்”என்றார்.
-அரவிந்த்