விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடிய விவசாயிகளை போலீசார் குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்றனர்.
கரூர் அருகே ஆண்டி செட்டிபாளையம் பகுதியில் 110 கிலோ வாட் திறன் கொண்ட உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியை மின்வாரியத்தினர் துவக்க ஆரம்பித்தார்கள். இந்த உயர் மின் கோபுரம் அமைக்கக் கூடாது என்று அந்தப் பகுதி விவசாயிகள் புகழூர் தாலூகா அலுவலகத்தில் நுழைந்து உள்ளிருப்பு போராடம் நடத்துவதாக அறிவித்தார்கள். இந்தப் போரட்டத்திற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. ஆனாலும், உள்ளிருப்புப் போராட்டம் நடந்தே தீரும் என்று விவசாயிகள் சங்க தலைவர் ஈசன் தலைமையில் பெண்கள் உட்பட பல விவசாயிகள் போராடச் செல்லும் போது போலீசார் அவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றனர்.
இது பற்றி விவசாயிகள் கூறும்போது, ’’இந்த உயர் மின் கோபுரம் ஆண்டிசெட்டிபாளையத்தில் இருந்து தென்னிலை அருகேயுள்ள கூணம்பட்டி கரை தோட்டம் வரை 10 கி.மீ தூரம் விவசாய நிலங்களில் செல்கிறது. இந்த மின் கோபுரம் விவசாய நிலத்தில் வரும் போது அந்த இடத்தைச் சுற்றி உயரமான மரங்கள் வைக்க முடியாது. நிலத்தின் மதிப்பு உடனடியாக குறைந்துவிடும்.
அரசாங்கம் தரும் இழப்பீடு நாங்கள் விற்பனை செய்யும் மதிப்புக்கு நூற்றில் ஒரு பங்கு கூட இருக்காது. இவ்வளவு நாள் பொத்தி பொத்தி பாதுகாத்து வைத்த நிலத்தை ஒரு உயர்மின் கோபுரம் மூலம் மதிப்பில்லாமல் போய்விடும். மேலும் விவசாயம் செய்யவும் இடையூறாக இருக்கும். பல ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களுக்கு இது பற்றி கவலை இல்லை. ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் நிலத்தில் இந்த உயர் மின் கோபுரம் வந்துவிட்டால் அவர்களின் நிலம் அடிமாட்டு விலைக்குதான் விற்கும். அதனால்தான் போராடுகிறோம்’’என்றார்கள்.
இதுபற்றி மின் வாரிய அதிகாரிகள் கூறும்போது, ’’நிலங்களுக்கு முறையான அரசு இழப்பீடு வழங்கித்தான் மின் கோபுரம் அமைக்கிறோம். நாட்டின் வருங்கால வளர்ச்சிபாதைக்கும், மின் தேவைக்கும் மின் கோபுரம் அமைத்தால்தான் தொழில் பெருகும். நான்குவழி சாலை அமைக்கும் போது நிலங்களை கையகப்படுத்துவது போல்
இது கிடையாது. அவர்கள் நிலம் அவர்களிடம்தான் இருக்கும். அதற்கும் இழப்பீடு தருகிறோம். நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார்.
-அரவிந்த்