சிவன் கோயில் மொய் அண்டா எங்கே? - கலகலக்கும் கரூர்

அண்டா வசூல் என்பது ஏற்புடையது அல்ல, அறநிலையத்துறை சார்பில் நிலையான உண்டியல் மட்டுமே கோயிலில் இருக்கவேண்டும்.
மஞ்சள் துணி கட்டி பணம் வசூல்
மஞ்சள் துணி கட்டி பணம் வசூல்

கரூரிலுள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நடந்த விழாவில்  அண்டாவில் மஞ்சள் துணி கட்டி ஓட்டை போட்டு வசூல் செய்த மொபைல் சர்வீஸ் ஊண்டியல் எங்கே? என்று இந்து முன்னணி அமைப்பினர் கேட்கும் கேள்வியால் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆடிப்போயிருக்கிறார்கள். 

இதுபற்றி நம்மிடம் பேசிய கரூர் நகர இந்துமுண்ணனி துணை தலைவர் செந்தில், கரூர் மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் இந்த கல்யாணபசுபதீஸ்வரர் கோயில், இங்கு தனியார் அமைப்பினர் ஆடிமாத தெய்வத்திருவிழா என்கிற நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

தெயவத்துக்கே திருமணமா? என்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டார்கள். இந்த  நிகழ்ச்சி நடந்துக்கொண்டிருந்த போது, தெய்வ திருமணத்திற்கு மொய் கொடுத்துட்டு போங்கோ, என்று கோயிலை சுற்றி  பல இடங்களில்  அண்டாவில் மஞ்சள் துணியை கட்டிக்கொண்டு கம்யூனிஸ்ட் கூட்டங்களில் உண்டியல் வசூல் செய்வது போல் அம்மா மொய் போடுங்க, ஐயா மொய் போடுங்க என்று வசூல் செய்து கொண்டிருந்தார்கள்.

இந்த கோயில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில், இந்த கோயிலில் நிலையான உண்டியல் இருக்கிறது.மேலும் கோயிலில் பக்தர்கள் கொடுக்கும் ஒரு ரூபாய்க்கு கூட ரசீது கொடுக்க வேண்டும்.

இந்து முண்ணனி செந்தில்
இந்து முண்ணனி செந்தில்

நிலமை இப்படியிருக்க, மாரியாத்தாவுக்கு கூல் ஊற்றுவதற்கு வசூல் செய்வதுபோல் செய்கிறார்களே என்று வசூல் ஈடுபட்டிருந்த ஒருவரிடம் யார் நீங்கள் என்று கேட்டேன், நான் மலைக்கோவிலூர் என் பெயர் மகாநாதன் என்றார். 

பொதுமக்கள் விரும்பி உண்டியலில் காசு போடுவதைத்தான் ஏற்க வேண்டும், இப்படியெல்லாம் வசூல் செய்யகூடாது என்றபோது நாங்க இப்படித்தான் 25 வருக்ஷமா வசூல் பண்ணிக்கிட்டு இருக்கோம் என்றார். 

கோயிலுக்கு வரும் பக்தர்களில் சிலர்  பணம் கொண்டு வந்திருப்பார்கள். சிலர் பணம் கொண்டு வந்திருக்கமாட்டார்கள், சிலர் வேறு செலவுக்காக வைத்திருப்பார்கள், பக்தர்கள் முன்பு உண்டியலை குலுக்கும் போது சாமிக்காக கேட்கிறார்கள், போடவில்லை என்று சாமி குத்தம் ஆகிவிடுமோ என்று பயந்து முக்கிய செலவுக்கு வைத்திருக்கும் பணத்தை கூட போட்டு விடுவார்கள்.. இது ஒரு தவறான செயல். மேலும் இந்த அண்டா உண்டியலில் வசூலான பணம் என்னானது? வசூல் எவ்வளவு? எதற்காக அண்டா உண்டியல்? இப்போது அந்த அண்டா எங்கே?  என்று அறநிலையத்துறைக்கு புகார் அனுப்பியிருக்கிறேன் என்றார். 

இதுபற்றி அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயதேவியிடம் கேட்டோம், “இந்த நிகழ்ச்சி நடந்த போது அங்கு அதிகாரியாக பொறுப்பிலிருந்தவர்களிடம் நிச்சயம் இதுபற்றி விசாரிக்கிறேன். அண்டா வசூல் என்பது ஏற்புடையது அல்ல, அறநிலையத்துறை சார்பில் நிலையான உண்டியல் மட்டுமே கோயிலில் இருக்கவேண்டும். அண்டாவை பற்றி முழுமையாக விசாரிக்கிறேன்” என்றார். 

சிவன் சொத்து புரிந்தால் சரி. 

-கரூர் அரவிந்த்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com