புகாரில் பெயர் இருந்தும் கரூர் மேயரை கைது செய்யாதது ஏன்? -விளக்கம் சொல்ல தயங்கும் போலீஸ்

நாங்கள் சும்மாதான் நின்றிருந்தோம், பெண் அதிகாரியிடம் வம்பு செய்தவர் மேயர் கவிதா தான் என தி.மு.க-வினர் புலம்பி வருகின்றனர்.
கரூர் மேயர் கவிதா
கரூர் மேயர் கவிதா

கடந்த மே 26ம் தேதி கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரின் வீடு அமைந்துள்ள ராமகிருஷ்ணபுரத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்தபோது தி.மு.க-வினர் திரண்டு அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து, அவர்கள் வந்த வாகனத்தை சேதப்படுத்தினார்கள். இதில் வருமானத்துறை இன்ஸ்பெக்டர் காயத்ரி காயமடைந்தார். மேலும் 3 அதிகாரிகள் காயமடைந்தார்கள்.

இதை தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்வதை நிறுத்திவிட்டு, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனத்திடம் புகார் செய்தார்கள். பிறகு காவல் கண்காணிப்பாளர் போதிய போலீஸ் பாதுகாப்பு தருவதாக உத்தரவாதம் கொடுத்த பிறகு வருமான வரித்துறை அதிகாரிகள், கரூர் காவல் நிலையத்தில் தங்களை தாக்கியவர்கள் மீது புகார் செய்தார்கள்.

இந்த புகாரில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா பெயரும் இருந்தது. வீடியோ மற்றும் போட்டோவிலும் மேயர் கவிதா அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்யும் காட்சி இருந்தது. ஆனால் கரூர் நகர போலீஸார் கவிதாவை தவிர்த்து மற்ற தி.மு.க வினர் 15 பேர்களை கைது செய்தார்கள். இந்த 15 பேருக்கும் கரூர் மாவட்ட நீதி மன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் வருமான வரித்துறை அதிகாரிகள் மதுரை ஐகோர்ட் கிளையில் மேல் முறையீடு செய்தனர்.ஐகோர்ட் 15 பேரின் ஜாமீனை ரத்து செய்து மீண்டும் கரூர் மாவட்ட கோர்ட் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. கரூர் கோர்ட்டில் ஆகஸ்ட் 1ம் தேதி நடந்த விசாரணையில் ஜாமீன் மறுக்கபட்டு 15 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். பிறகு கடந்த 7ம் தேதி நடந்த ஜாமீன் விசாரணையிலும், ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் சிறை செல்லும் முன் கொதித்தெழுந்த தி.மு.க சிறைவாசிகள், நாங்கள் சும்மாதான் நின்றிருந்தோம், பெண் அதிகாரியிடம் வம்பு செய்தவர் மேயர் கவிதா, மேயர் கவிதா என்ன செய்தார் என்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் புகாரில் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் மேயரை விட்டுவிட்டு சாதரணமான எங்களை கைது செய்துள்ளார்கள் என்று தங்கள் குடும்பத்தினரிடம் புலம்பினார்கள்.

இதுகுறித்து அ.தி.மு.கவின் ஐ.டி விங்கில் மேயர் கைது எப்போ என்று போலீசாரை கேள்வி கேட்டு வரும் நிலையில், மேயர் கவிதாவை தொடர்பு கொண்டோம்.அவர் போனை எடுக்கவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்துள்ள புகார் நகலின் காப்பியை வாட் அப் மூலம் அனுப்பி விளக்கம் கேட்டோம், அந்த வாட்ஸ் அப் பதிவை பார்த்தவர் பதிலளிக்கவில்லை. இது பற்றி கரூர் டவுன் டி.எஸ்.பி. சரவணனிடம் கேட்டோம், இந்த புகார் பற்றி நேரில்தான் பேசமுடியும் என்று நழுவினார்.

-அரவிந்த்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com