கரூர்: ’5 வியாபாரிகளுக்கு 3 அலுவலர்கள்’- மூடப்படுகிறதா உழவர் சந்தை

கரூர் அருகே உழவர் சந்தை பொதுமக்கள் கூட்டம் இன்றி மூடப்படும் நிலையில் உள்ளதால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
பள்ளப்பட்டி அருகே உள்ள உழவர் சந்தை
பள்ளப்பட்டி அருகே உள்ள உழவர் சந்தை

கரூர் அருகே உழவர் சந்தையில் ஐந்து வியாபாரிகளும், மூன்று அலுவலர்களும் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உழவர் சந்தை மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சி சார்பாக நகராட்சி மற்றும் வாரச்சந்தை அருகே உழவர் சந்தை இயங்குகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட இந்த உழவர் சந்தை இறுதிகட்டத்தை எட்டிவிட்டது.

நாம் உழவர் சந்தையைக் கடந்த ஒரு வாரமாகக் கண்காணித்த வகையில், தினமும் 5 முதல் 7 விவசாயிகள் மட்டுமே விற்பனைக்குச் சிறிதளவு காய்கறிகள் கொண்டு வருகிறார்கள்.ஆனால் பக்கத்தில் நகராட்சி கட்டிடத்தில் இயங்கும் தினசரி சந்தையில் கூட்டம் களைகட்டுகிறது.

இதுபற்றி விவசாயி செல்லமுத்துவிடம் பேசினோம். ”அரசு நிர்ணயித்த விலையில் இங்கு விற்கிறோம். சில பொருட்கள் இங்கு விற்கப்படும் விலையை விடத் தினசரி சந்தையில் விலை குறைவாகக் கொடுத்து உழவர் சந்தையில் விலை அதிகம் என்கிற தோற்றத்தை உருவாக்கி விட்டார்கள். அதனால் கூட்டம் தினசரி சந்தையில் அதிகமாக இருந்ததால் இங்கு விற்பனை செய்த பல விவசாயிகள் சுங்க வரி கொடுத்து தினசரி சந்தையில் விற்பனை செய்கிறார்கள்.

உழவர்கள் மத்தியிலேயே இந்த உழவர் சந்தைக்கு மதிப்பு இல்லாமல் போய் விட்டது இந்த 5 விவசாயிகளைக் கண்காணிக்க இரண்டு அலுவலர் ஒரு காவலர் என மூவருக்கு அரசு ஊதியம். கிராமங்களில் சென்று உழவர்களிடம் உழவர் சந்தைக்கு நீங்கள் வந்து விற்பனை செய்யும் போது என்ன என்ன நன்மைகள் என்று எடுத்து சொல்லி உழவர் சந்தைக்கு விவசாயிகளை வரவழைக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதான் இன்றைய நடுத்தர ஊர்களின் உழவர் சந்தைகளின் பரிதாப நிலை” என்றார்.

இதுபற்றி உழவர் சந்தையில் இருந்த ஊழியர் நம்மிடம். ”தினசரி சந்தை அடுத்தக் கட்டிடத்தில் இயங்குவதால் அங்கு அனைத்து பொருட்களும் கிடைப்பதால் ஒரே இடத்தில் அனைத்து பொருட்களும் வாங்கி விடலாம் என்கிற நோக்கில் அங்கேயே வாங்கிகொண்டு அப்படியே சென்று விடுகின்றனர். அதனால் எங்கள் உழவர் சந்தை வெறிச்சோடி இருக்கிறது” என்றார்.

-அரவிந்த்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com