புதுச்சேரி மாநிலம் காரைக்கால் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடுக்கு நேற்று தமிழக அரசு பேருந்து ஒன்று இரவு 10 மணியளவில் புறப்பட்டு சென்றுள்ளது. பேருந்தை டிரைவர் ராஜராஜன் இயக்கியுள்ளார். திருநள்ளாறு அருகே சென்றபோது அங்கே தரைப்பாலத்தை சரிசெய்யும் பணி நடப்பதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லுமாறு நெடுஞ்சாலைத்துறை சார்பில் எச்சரிக்கை ஒன்று வைக்கப்பட்டிருந்தை பார்க்காமல் டிரைவர் பேருந்தை அந்த பாதையில் வேகமாக இயக்கியிருக்கிறார்.
பேருந்திலிருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டு பேருந்தை நிறுத்தச்சொல்லியும் டிரைவர் அதனை காதில் வாங்கவில்லை. பேருந்தும் நிற்காமல் வேகமாக செல்லவே இது குறித்து நடத்துநரிடம் கூறியபோது அவரும் ’டிரைவர் நன்றாகத்தான் ஓட்டுகிறார். நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்’ என்றபடி பயணிகளை தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்.
இந்நிலையில் ஆண் பயணிகள் சிலர் டிரைவரிடம் சென்று சத்தம் போடவே அதன் பிறகு பேருந்தை நிறுத்தியிருக்கிறார். அப்போதுதான் டிரைவர் ராஜராஜன் கடுமையான மதுபோதையில் இருப்பது தெரியவந்தது. வாய் குழறி பேசவே முடியாமல் அதிக போதையில் பேருந்தை தாறுமாறாக இயக்கியதால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ‘இவரை நம்பி எப்படி பயணிக்கமுடியும்?’என்றபடி இருக்கையில் அமர்ந்திருந்த டிரைவரை பிடித்து இழுத்து தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர் அவரை திருநள்ளாறு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருநள்ளாறு போலீசார் காரைக்கால் போக்குவரத்து போலீசார் வசம் ஒப்படைத்து மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மதுபோதைக்குரிய சோதனைகளுக்கு உட்படுத்தினர். இதனால் ஒரு மணி நேரம் தாமத்துடன் பயணிகளை மாற்றுப்பேருத்தில் போலீசார் அனுப்பி வைத்தனர். போக்குவரத்து கழக அதிகாரிகள் டிரைவர் ராஜராஜனுக்கு முறைப்படி நோட்டீஸ் கொடுத்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, “நீண்ட தூரம் செல்லும் பேருந்தின் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மதுபோதையில் செல்கின்றனர். இது குறித்து பலமுறை புகார் கூறியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்த விஷயத்தில் உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். பேருந்து புறப்படுவதற்கு முன்பு டிரைவர், கண்டக்டர் இருவரையும் மது அருந்தியுள்ளார்களா? என சோதனை செய்யவேண்டும்” என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஆர்.விவேக் ஆனந்தன்