கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி பகுதியில் தனது தங்கை முறையான பொறியியல் பட்டதாரி இளம்பெண்ணை குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டலில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி, கொல்லன் விளை பகுதியை சேர்ந்த 29-வயதான பிபின் பிரியனுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளன. ஆறு குற்ற வழக்குகளுடன் குற்றச் சரித்திர பதிவேடு ரெளடி பட்டியலில் இடம் பிடித்துள்ள இவர் பிரபல அரசியல் பிரமுகர் ஒருவருக்கு கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த இவரது பெரியப்பா மகள் 25 வயதான திலகா பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர். இவருக்கு உடன் பிறந்த சகோதரர்கள் இல்லாததால் அண்ணன் முறையான பிபின் பிரியனுடன் சகஜமாக பழகி வந்துள்ளார். அவரும் திலகாவை கல்வி நிலையங்களுக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வது வாடிக்கை என்று கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் 10-ம் தேதி திலகா ஆலங்கோடு பகுதியில் வீட்டிற்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக காரில் வந்த பிபின் பிரியன், திலகாவை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறி காரில் ஏற்றியுள்ளார். ஆனால், வீட்டிற்கு அழைத்து செல்லாமல் அவரது நண்பர் ஒருவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்ததோடு அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
பின்னர் அந்த ஆபாச வீடியோவை திலகாவிற்கு அனுப்பி வைத்து, இதை இணையத்தில் பரப்பாமல் இருக்க வேண்டும் என்றால் நான் அழைக்கும் போதெல்லாம் என் ஆசைக்கு இணங்க வேண்டும் என மிரட்டியுள்ளார். ஆனால், அவரது ஆசைக்கு திலகா இணங்க மறுத்துள்ளார். இந்நிலையில் 18-ம் தேதி திலகாவை செல்போனில் தொடர்பு கொண்ட பிபின் பிரியன், ’வரும் ஞாயிற்று கிழமை நான் அழைக்கும் இடத்திற்கு வரவேண்டும். இல்லையேல் ஆபாச வீடியோவை உன் பெற்றோருக்கும், சமூக வலைதளங்களிலும் அனுப்பி விடுவேன். இதை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன்’’ என மிரட்டியுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த திலகா இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மிரட்டல் ஆடியோவுடன் புகாரளித்தார். புகாரின் பேரில் பிபின் பிரியன் மீது பெண்ணை பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து பெண்மைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகவும், தனக்கு இணங்க மறுத்த அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது என இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் பிபின் பிரியனை தேடி வருகின்றனர்.