கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பட்டரிவிளை பகுதியைச் சேர்ந்தவர் அருள். இவர், மெக்கானிக்கல் இஞ்சினியராக உள்ளார். இவருக்குக் கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியைச் சேர்ந்த ஷபிதா நாயக் என்ற 60 வயதான மூதாட்டியிடம் முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கொருவர் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அருள் அந்த மூதாட்டியிடம் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிடப் போவதாக மிரட்டி கூகுள் பே மூலம் ₹12 ஆயிரம் பணம் பெற்றுள்ளார். இதேபோல் அடுத்து மற்றொரு புகைப்படத்தை மார்பிங் செய்து உன்னுடைய கணவருக்குப் புகைப்படங்களை அனுப்பி விடுவேன் என மிரட்டிக் கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஷபிதா நாயக் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பின்னர், இச்சம்பவம் குறித்து கர்நாடக மாநிலம் பெங்களூர் புத்தூர் காவல் நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் பெண்மைக்குக் களங்கம் விளைவித்து பெண்ணை மிரட்டி பணம் பறித்தது உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து, நேற்று கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதிக்கு வந்த கர்நாடக போலீசார் இரணியல் போலீசார் உதவியுடன் அருளைக் கைது செய்து பெங்களூர் அழைத்துச் சென்றனர்.