கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே நாகக்கோடு பகுதியில் தமிழ்நாடு அரசின் ரப்பர் ஒழங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த ரப்பர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் வளாகத்தில் ரப்பர் விவசாயிகள் குழு சார்ந்த விவசாயிகளின் ரப்பர் ஷீட்கள் உலர் கூடம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் உலர் கூடத்தில் திடீரென தீ பற்றி எரிவதை பார்த்த அப்பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு தகவலளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரம் தீயணைப்பு துறையினர் ரப்பர் குடோனில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் குடோனில் அடுக்கி வைக்கபட்டிடருந்த ரப்பர் மூட்டைகளில் தீ மளமளவெனப் பற்றி எரிந்ததால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறை வீரர்கள் திணறினர். தொடர்ந்து பல மணிநேர போராட்டத்திற்குத் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்தத் தீ விபத்தின் போது 3 பணியாளர்கள் உலர் கூடத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தனர். அதில் திருந்திக்கரை பகுதியை சேர்ந்த விக்ரமன் (65) லேசான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுத் தக்கலை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டார்.
இந்தத் தீ விபத்தில் 75 டன் ரப்பர் ஷீட்கள் முழுவதுமாக எரிந்துள்ளது. இதேபோல் 1 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிமும் எரிந்து சேதமடைந்துள்ளது. இந்த ரப்பர் ஷீட்கள் முழுவதும் விவசாயிகள் உலர வைப்பதற்காகக் கொடுக்கபட்டது குறிப்பிடதக்கது. இந்த விபத்து குறித்து குலசேகரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.