கன்னியாகுமரி: மூதாட்டியின் உடல் உறுப்பு தானத்தை ஏற்க மறுப்பு - வருவாய்த்துறையின் தாமதத்தை கண்டித்து போராட்டம்

வருவாய்த்துறையின் காலதாமதத்தை கண்டித்தும், அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மூதாட்டியின் உறவினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூதாட்டி லலிதா
மூதாட்டி லலிதா

கன்னியாகுமரி அருகே திருநந்திக்கரையில் உடல்தானம் செய்ய விரும்பிய மூதாட்டியின் உடலை வருவாய்துறையினர் காலம் தாழ்த்தியதால் மருத்துவத்துறை உடலை ஏற்க மறுத்துவிட்ட நிலையில், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், திருநந்திக்கரை வியாலிவிளை பகுதியை சேர்ந்தவர் பாலையன். இவரது மனைவி லலிதா (73). இவர் மூத்த மகள் ஷீஜா உடன் வசித்து வருகிறார். மூதாட்டி லலிதா ஏற்கனவே தனது உடலை உடல்தானம் செய்யவேண்டும் என்னும் விருப்பத்தை உறவினர்களிடம் தெரிவித்திருந்தும் உறவினர்கள் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மூதாட்டி லிலதாவின் உடல்நலம் குன்றிய நிலையில், உடல்தானம் செய்யவேண்டுமென்ற தனது விருப்பத்தைத் தொடர்ந்து வலியுறுத்தவே மூத்த மகள் ஷீஜா தனது கணவர் சந்திரனுடன் நாகர்கோவில் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்குச் சென்று உடல்தானத்திற்கான விண்ணப்பத்தைப் பெற்றுள்ளார்.

பின் அதை பூர்த்தி செய்து கடந்த 27ஆம் தேதி திற்பரப்பு வருவாய் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் திருவட்டார் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று உடல்தானத்திற்கான விண்ணப்பத்தை அங்கீகரிக்க வேண்டி கோரிக்கை மனுவும் அளித்துள்ளனர். ஆனால் வருவாய்துறையினர் இந்த மனுவை கிடப்பில் போட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் மூதாட்டி லலிதா இன்று உயிரிழந்தார். ஆனால் அரசு தரப்பினர் மூதாட்டியின் உடலை தானமாக பெற மறுத்துள்ளனர். இதனால் லலிதாவின் உறவினர்கள் வருவாய்துறையினரின் அலட்சியம் தான் இந்த பிரச்னைக்குக் காரணம் என்றதோடு, மூதாட்டி லலிதாவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அரசு மருத்துவகல்லூரி மாணவர்களின் படிப்பிற்காக மூதாட்டியின் உடலை தானம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் உயிரிழந்த மூதாட்டியின் உடலை குளிர்பதன பெட்டியில் வைத்து நாளை வரை அரசின் நடவடிக்கைக்காகக் காத்திருக்கபோவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com