கன்னியாகுமரி: அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய நா.த.க நிர்வாகி வெளியேற்றம் - கிராம சபைக் கூட்டத்தில் என்ன நடந்தது?

கன்னியாகுமரி அருகே கிராம சபை கூட்டத்தில் அமைச்சரிடம் நா.த.க நிர்வாகி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது
கன்னியாகுமரி: அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய நா.த.க நிர்வாகி வெளியேற்றம் - கிராம சபைக் கூட்டத்தில் என்ன நடந்தது?

கன்னியாகுமரி அருகே அமைச்சரிடம் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கேள்வி எழுப்பியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நேற்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றது. இதில் பெரும்பாலான கூட்டங்கள் அமைதியான முறையிலும், சில கூட்டம் சலசலப்புடனும் நடைபெற்று முடிந்தது.

அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம், அருவிக்கரை ஊராட்சியில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது, அங்கிருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி சீலன் என்பவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் கொள்ளை போவதாக அமைச்சர் மனோ தங்கராஜ்யிடம் கேள்வி எழுப்பினார்.

அப்போது அங்கிருந்த அதிகாரிகள் அருவிக்கரை ஊராட்சியைச் சேர்ந்த மக்கள் மட்டுமே கேட்க வேண்டும். அருவிக்கரை பஞ்சாயத்துத் தொடர்பான பணிகள் பற்றிக் கேட்கலாம் எனத் தெரிவித்தனர்.

இதையெல்லாம் பொருட்படுத்தாமல், நாம் தமிழர் கட்சி நிர்வாகி சீலன் கனிமவளக்கொள்ளை பற்றி மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பினார். இதையடுத்து அமைச்சர் அவருக்குப் பதில் அளித்தார். அப்போது குறுக்கிட்ட ஊராட்சியைச் சேர்ந்த சிலர் சீலனுடன் வாக்குவாதம் செய்தனர். கிராம சபைக்கூட்டத்தில் கேள்வி எழுப்பக்கூடாதா என்று சீலன் மீண்டும் கேள்வி எழுப்பினார்.இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சீலனை கிராம சபைக்கூட்டத்தில் இருந்து போலீஸார் வெளியேற்றினர்.

கடந்த சட்டமன்றத்தேர்தலின்போது , பத்மநாபபுரம் தொகுதியில் அமைச்சர் மனோ தங்கராஜை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் சீலன் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com