திருப்பதியிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி அதிவேகமாக வந்த பாரதி பஸ் சர்வீஸ் பேருந்து காஞ்சிபுரம் படுநெல்லி அருகே ஒரு இளம் விவசாயி மீது மோதி விபத்துக்குள்ளானது . இதில் சம்பவ இடத்திலேயே விவசாயி உயிரிழந்தார். ஆத்திரமடைந்த உறவினர்கள் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா சயனாபுரம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் தயாளன் என்பவரின் மகன் ஜானகிராமன். தயாள் மற்றும் அவரது மகன் ஜானகிரான் இருவருமே விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி அருகே இருசக்கர வாகானத்தில் வந்த ஜானகிரான் மீது அதிவேகமாக வந்த திருப்பதி – காஞ்சிபுரம் பாரதி பஸ் சர்வீஸ் தனியார் பேருந்து நேருக்கு நேராக மோதியதில் ஜானகிராமன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதனை அறிந்த ஜானகிராமனின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஆத்திரத்தில் விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் கண்ணாடி மற்றும் பேருந்தை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இந்த விபத்தை பற்றி அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டகாரர்களை கட்டுபடுத்தி, கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. இதனையெடுத்து 30-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்ட நிலையில் சடலத்துடன் காஞ்சிபுரம்-அரக்கோணம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனையெடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் உட்கோட்ட காவல் துறையின் துணை காவல் கண்காணிப்பாளர் ஜூலியர் சீசர் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படாத விவசாயியின் உறவினர்கள் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் காஞ்சிபுரம் அரக்கோணம் சாலையில் சுமார் 2மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் அவதிக்கு உள்ளானார்கள்.
பின்னர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டகாரர்களிடம் காவல்துறை உறுதியளித்தால் போராட்டமானது கைவிடப்பட்டது. இதனையெடுத்து போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், விபத்து ஏற்படுத்தி தப்பியோடிய பேருந்து ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
சுமார் 50-க்கும் மேற்பட்ட பேருந்துகளை கொண்டுள்ள இந்த பாரதி பேருந்துகள் தொடர்ந்து அதிவேகமாக செல்வது வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது. இதனால் பலமுறை விபத்து நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.