காஞ்சிபுரத்தில் சாலையில் வெள்ளமென கழிவுநீர் வழிந்தோடியதால் பாதாள சாக்கடை அடைப்பை நீக்க ஆட்களை இறக்கிவிட்டு அடைப்பை நீக்கிய அவலம் நடந்துள்ளது.
பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டால் தொழிலாளர்களை பயன்படுத்தி சுத்தம் செய்ய வைத்து பாதாள சாக்கடையிலிருந்து வெளியேறும் விஷ வாயு தாக்கி ஏராளமானோர் இறந்துள்ளனர். இவ்வாறு குழிக்குள் இறங்கக் கூடாது என 2013-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அது சட்டமாகவும் உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, மனிதன் இறங்கும் குழியாக இருந்ததை இயந்திரக்குழி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது.
மனிதனை சாக்கடைக்குள் இறக்கி விட்டால் தண்டனை கொடுக்க வேண்டும் என்பது சட்டமாக இருந்தாலும் அது முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஜெட் ராடார் இயந்திரத்தை வைத்துப் பணிகளை செய்ய வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அவ்வாறு இயந்திரம் பயன்படுத்தி வேலை செய்யும்போது கூட போதிய உபகரணங்களை அணிந்து கொண்டுதான் வேலை பார்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள நிலையில்,
காஞ்சிபுரம் மாநகராட்சியின் மையப் பகுதியான ஏகாம்பரநாதர் திருக்கோவில் தெரு-பாண்டவர் தூத பெருமாள் சன்னதி தெரு சந்திப்பில் கடந்த மூன்று நாட்களாக புதை வடிகால் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவு நீர் சாலைகளில் ஆறாக பெருகெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட இடத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு இரவோடு இரவாக பணி முடிக்க மேயர் உத்தரவிட்ட நிலையில், காஞ்சிபுரம் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளிலிருந்து அடைப்பை நீக்க தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு நேற்று நள்ளிரவு ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி தெரு பகுதியில் 15அடி ஆழமுள்ள பிரதான பாதாளசக்கடையில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் கூட இல்லாமல் ஆட்களை இறங்கி அதிலிருந்த அடைப்பை நீக்கும் விதமாக மண் அள்ளப்பட்டது.
அதேபோல் அருகாமையிலிருக்கூடிய பாவா தெரு பகுதியில் ஆட்கள் இறங்கி அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்தியாளர்கள் வீடியோ எடுப்பதை கண்ட தொழிலாளர்கள் உடனே பாதாள சாக்கடை குழிக்குள் இருந்து குழியை விட்டு வெளியே வந்தனர்.
வீடுகளிலோ, ஓட்டல்களிலோ செப்டிக் டேங்கில் ஆட்களை வைத்து இறக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென ஓட்டல்களுக்கும், பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் மாநகராட்சி நிர்வாகம் தற்போது சட்டத்தையும், விதிமுறைகளையும் புறம் தள்ளி செயல்பட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்க எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி தொழிலாளர்களை குழிக்குள் இறக்கி உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கடலூரில் ஓரு வீட்டில் செப்டிக் டேங்கில் இறங்கி மூன்று பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்ததும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டையில் தோல் தொழிற்சாலையில் ஒருவர் உயிரிழந்து மேலும் மூன்று பேர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.