காஞ்சிபுரம்: ஹோட்டலுக்குள் புகுந்து தாக்கிய கும்பல்- என்ன நடந்தது?

உணவக ஊழியர்களை அந்த மர்ம நபர்கள் ஆபாச வார்த்தைகளால் பேசியிருக்கின்றனர்.
காஞ்சிபுரம்: ஹோட்டலுக்குள் புகுந்து தாக்கிய கும்பல்- என்ன நடந்தது?

காஞ்சிபுரம் மாநகருக்கு உட்பட்ட காந்தி சாலை, தேரடி அருகே ராயல் பிரியாணி என்கிற உணவகம் இயங்கி வருகிறது. இந்த அசைவ உணவகத்தில் நேற்று இரவு இருவர் சேர்வா வாங்கிட வந்திருக்கின்றனர். அப்போது அந்த இருவரும் உணவகத்தின் சமையலறையில் புகுந்து சேர்வா கொடுக்கக் கோரியுள்ளனர். அதற்கு ’’சமையலறையில் சூடான பொருட்கள் இருக்கிறது. ஆகையால், உள்ளே வரவேண்டாம்’’என உணவக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதற்காக உணவக ஊழியர்களை அந்த மர்ம நபர்கள் ஆபாச வார்த்தைகளால் பேசியிருக்கின்றனர்.

இதனால், உணவக ஊழியர்களுக்கும், அந்த மர்ம நபர்களுக்கும் வாக்குவாதமாகி வாங்கிய சேர்வா பாட்கெட்களை தூக்கி அடித்துவிட்டு சென்று இருக்கின்றனர். இதனையடுத்து அவர்கள் சற்று நேரத்திலேயே மீண்டும் அரை ஆடைகள் அணிந்த இருவருடன் உணவகத்திற்கு வந்து அங்கிருந்த இரும்பிலான சேர்களை தூக்கி அடித்துள்ளனர். உள்ளே வந்த அவர்கள் அங்கிருந்த உணவக ஊழியர்களை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்த பொருட்களையெல்லாம் தூக்கி அடித்து அராஜகத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இதனால் அந்த உணவகத்தில் உணவருந்த வந்திருந்த வாடிக்கையாளர்கள் பதறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்திருக்கின்றனர். இதில் உணவக ஊழியர் ஷேக் ஹாகீம் என்னும் வடமாநிலத்தவருக்கு தலையில் பலத்த காயமும் பிலால் என்பவருக்கு சிறிய காயமும் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் இருவரும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில் ஷேக் ஹாகீமிக்கு தலையில் பலத்த காயமடைந்த நிலையில் தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதனையெடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விஷ்ணு காஞ்சி காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அராஜகத்தில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட நபர்களின் அடையாளங்களை கொண்டு தப்பியோடிய நான்கு பேரை தேடி வருகின்றனர். அவர்கள் விட்டு சென்ற இரண்டு இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com