பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் கலந்து கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் சுமதி திடீரென தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஏகனாபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் சுமதி. இவரது கணவர் சரவணன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப சூழ்நிலை காரணமாக மூச்சந்தி அம்மாள் என்கிற மூதாட்டியிடம் ரூ.50 ஆயிரம் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதற்கான வட்டி செலுத்தி வந்ததாகக் கூறப்படும் நிலையில் கடன் கொடுத்த மூதாட்டி மூச்சந்தி அம்மாளின் பேரன் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறையில் பணிபுரியும் அருண்குமார் என்பவர் நேற்று (ஞாயிறுக்கிழமை) சரவணன் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் இல்லாத நேரத்தில் தகாத வார்த்தைகளால் தீட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த சுமதி இன்று காலை மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
இது குறித்து அறிந்த குடும்பதார் உடனடியாக சுமதியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அனுமதித்தனர். அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சைகள் அளித்து வருகின்றனர்.
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் கலந்து கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் சுமதி திடீரென தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.