காஞ்சிபுரம்: 'தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுங்க' - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

'காஞ்சிபுரத்தில் "விதை பப்ளிக் ஸ்கூல்" என்ற பெயரில் பொய் விளம்பரப்படுத்தி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக' மனுவில் தகவல்
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

சி.பி.எஸ்.இ. அங்கீகாரம் பெற்றுள்ளதாக பொய்யாக விளம்பரப்படுத்தி மாணவர் சேர்க்கை நடத்தும் தனியார் பள்ளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய காஞ்சிபுரம் கோனேரி குப்பம் பகுதியைச் சேர்ந்த மோதிலால் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'கடந்த 2001-ம் ஆண்டு கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 96 குழந்தைகள் பலியான சம்பவத்தையடுத்து, நீதிபதி சம்பத் தலைமையிலான ஆணையம் வகுத்த விதிகளின் அடிப்படையில், தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெற பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை வகுத்து தமிழக அரசு 2006 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்து இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.

இதே சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றமும், பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தது என்றும், கல்வி உரிமைச் சட்டத்திலும், அரசு அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்றுநி தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

பள்ளி கட்டிடங்களுக்கு உரிமம் பெறுவது, கட்டிட ஸ்திரத்தன்மை சான்று பெறுவது உள்ளிட்ட நிபந்தனைகளும் இந்தச் சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

ஆனால், மேன்ஷன் போல குறுகிய அறைகளுடன், எந்த அங்கீகாரமும், ஒப்புதலும் இல்லாமல், காஞ்சிபுரத்தில் "விதை பப்ளிக் ஸ்கூல்" என்ற பள்ளி செயல்பட்டு வருவதாகவும், சி.பி.எஸ்.இ. அங்கீகாரம் பெற்றுள்ளதாக பொய் விளம்பரப்படுத்தி மாணவர் சேர்க்கை நடத்தி வருவதாக" மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தகுதியான கட்டிட வசதி இல்லாமல், பொய் விளம்பரங்கள் மூலமாக மாணவர் சேர்க்கை மேற்கொள்ளும் இது போன்ற தனியார் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும்ட என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி மஞ்சுளா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நடவடிக்கையை துவங்கியுள்ளதாகவும், மனுதாரரின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை, பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இது சம்பந்தமாக மனுதாரர் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டனர்.

மேலும், சம்பந்தப்பட்ட பள்ளியில் படிக்கும் மாணவர்களை அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com