தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பல்வேறு மாவட்டங்களில் பொதுக்கூட்டங்களும், அரசு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் எதிரே உள்ள பேரறிஞர் அண்ணா அரங்கத்தில் ’முதலமைச்சரின் ஈடில்லா ஆட்சி; ஈராண்டு சாட்சி’ என்கிற சாதனை மலர் வெளியீட்டு விழா மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறையின் கீழ், 500 பயனாளிகளுக்கு உதவித்தொகை, 202 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டம் மூலம் மாதந்திர உதவித்தொகைக்கான ஆணை என மொத்தம் 4 கோடியே 17 இலட்சத்து 82 ஆயிரத்திற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பயனாளிகள் இன்று காலை 10 மணிக்கு முன்னரே வந்திருந்து அரங்கில் காத்திருந்தனர். இவ்விழா அரங்கிற்கு தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மதியம் 12 மணிக்கு மேலாக வந்த நிலையில், காற்றோட்டமற்ற அவ்வரங்கில் பயனாளிகளின் சூழ்நிலை புரிவதாகவும், மேலும் அவர்களின் நலன் கருதி சில நிமிடங்களே பேசி முடித்துவிட்டு ஒரு சில பயனாளிகளுக்கு பட்டா மற்றும் உதவித்தொகைக்கான ஆணைகளையும் கொடுத்து விழாவினை துவக்கி வைத்தார்.
இதில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என நூற்றுக்கணக்கானோர் தங்களுக்கான ஆணைகள் பெற்றிட பல மணி நேரம் காத்திருந்த நிலையில், அமைச்சரால் சிலருக்கு மட்டுமே உதவி தொகைக்கான ஆணை கிடைக்கப்பெற்றது. மீதமுள்ளவர்களை அதிகாரிகள் அந்தந்த வி.ஏ.ஓ அலுவலகங்களுக்கு நாளை காலை வரும்படி கூறியதால், பலமணிநேரம் காத்திருந்த மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என பலரும் அதிகாரிகளிடம் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அரங்கம் சற்று பரபரப்புடன் காணப்பட்டது.
மேலும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என பலரும் தங்களது ஆணைகளை வாங்கிட வருகை தந்து ஏமாற்றத்துடன் புலம்பிய படியே வீடுகளுக்குத் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.