கள்ளக்குறிச்சியில் கணவருடன் வாழ மறுத்த மனைவியை கணவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி அருகில் உள்ள மோ.வன்னஞ்சூர் கிராமத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் மனைவி விஜயாவை கணவன் முருகன் கத்தியால் சரமாரியாகக் குத்தியதில் விஜயா சம்பவ இடத்திலேயே பலியானார்.
முருகனுக்கும் விஜயாவுக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இருவருக்கும் குடும்பம் நடத்துவதில் ஏற்பட்ட பிரச்னையால் விஜயா தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். கணவர் முருகனுடன் இணைந்து குடும்பம் நடத்த விருப்பம் இல்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மனைவி விஜயாவை குடும்ப நடத்த அழைத்ததாகவும், அப்போது மனைவி விஜயா வர மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் முருகன் நேற்றிரவு (3.4.2023) விஜயாவை கத்தியால் குத்தியும் கழுத்தை அறுத்தும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
மேலும், குற்றவாளி முருகனை பிடிக்கச் சென்ற சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலனை கால் தொடை பகுதியில் முருகன் கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் விடாமல் குற்றவாளி முருகனை போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்தநிலையில் எஸ்.ஐ-க்கு கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.