தமிழக அரசில் தற்போது உயர் கல்வித் துறை அமைச்சராக உள்ள க.பொன்முடி, கடந்த 2006-2011ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில், கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பதவி வகித்தபோது, செம்மண் குவாரியில் அதிகளவில் செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை, அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி, உறவினர் ராஜ மகேந்திரன் உள்ளிட்டோர் மீது, 2012ம் ஆண்டு பதிவுசெய்த வழக்கின் விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி தொடர்புடைய சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் சமீபத்தில் சோதனை நடத்தியதுடன், அவர்களிடமும் விசாரணை நடத்தியது.
அதன்பின்னர் செம்மண் குவாரி முறைகேட்டில் கிடைத்த தொகையை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும், முக்கிய ஆவணங்களும், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடு முடக்கப்பட்டு உள்ளதாகவும் அமலாக்கத்துறை அறிவித்தது.
இதன் அடிப்படையில் சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் திமுக எம்.பி. கௌதம சிகாமணி உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து, அதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இந்த குற்றப்பத்திரிகைக்கு எண்ணிடப்பட்டு, கோப்புக்கு எடுத்துக் கொண்ட முதன்மை நீதிபதி எஸ்.அல்லி, இந்த வழக்கை சென்னை எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். அதன்படி இந்த வழக்கு இரண்டாவது சிறப்பு நீதிமன்றத்தில் செப்டம்பர் 11ம் தேதி விசாரணைக்கு வருகிறது.