கலைஞர் நினைவிடத்தில் பேனா சின்னம்: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

மத்திய அரசு மற்றும் மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம், பொதுப்பணித்துறை ஆகியோர் பதிலளிக்க உத்தரவு
கலைஞர் பேனா நினைவு சின்னம்
கலைஞர் பேனா நினைவு சின்னம்

கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் பேனா நினைவுச் சின்னத்திற்கு வழங்கப்பட்ட கடற்கரை மண்டல மேலாண்மை அனுமதியை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி தாக்கல் செய்த மனுவிற்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் கடலில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவைப் போற்றும் வகையில் பேனா வடிவிலான நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு கடலோர ஒழுங்குமுறை மண்டலம் கடந்த ஜூன் 19ஆம் தேதி அனுமதி வழங்கியிருந்தது.

பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஜனவரி 31 நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டமானது உரிய சட்டவிதிகளின்படி நடைபெறவில்லை என்பதால், கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதியை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையைச்சேர்ந்த வெண்ணிலா தாயுமானவன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுபினர் புஷ்பா சத்திய நாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அடங்கிய அமர்வானது, வழக்கு குறித்து மத்திய அரசு மற்றும் மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம், பொதுப்பணித்துறை ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com