மதுரை: கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு - சிறப்பு அம்சங்கள் என்ன?
மதுரை புதுநத்தம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
முன்னதாக, நூலக வளாகத்தில் கருணாநிதியின் சிலையையும் திறந்து வைத்தார். தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சர்வதேச தரத்தில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தில், தற்போது 3 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. 6 தளங்களுடன் நூலகம் கட்டப்பட்டுள்ளதால், லிப்ட் வசதி செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும், தரைதளத்தில் அழகிய கலைக்கூடம் மற்றும் மாற்றுத் திறனாளிகளை கருத்தில் கொண்டு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. கூட்ட அரங்கம், முக்கிய பிரமுகர்களின் அறையுடன், சொந்த நூல்களை கொண்டு வந்து படிக்கவும் தனியாக பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதல் தளத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதிய நூல்கள் கொண்ட பிரிவும், 2வது தளம் முழுவதும் தமிழ் நூல்கள் பிரிவும் இடம் பெற்று இருக்கின்றன.
மேலும் 3வது தளத்தில் ஆங்கில நூல் பிரிவு மற்றும் ஆராய்ச்சி இதழ் பிரிவு அமைந்துள்ளன. 4வது தளத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
5வது தளத்தில் மின் நூலகம், பல்லூடகப் பிரிவு நூல் பாதுகாப்பு பிரிவு, ஒளிப்பதிவு கூடம் ஆகியவை உள்ளன. 6வது தளத்தில் நூல் பகுப்பாய்வு, நிர்வாகப் பிரிவு, பணியாளர்கள் உணவு அருந்தும் இடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறாக பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம், தென் மாவட்டத்தில் மதுரையின் மற்றொரு அடையாளமாக திகழும் என்பதில் துளியும் மாற்றம் இல்லை.