காஞ்சிபுரத்தில் பா.ஜ.க சார்பில் நெசவாளர்கள் தின விழா பேரணி நடைபெற்றது. இப்பேரணியை பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார். தாலுக்கா அலுவலகம் அருகே தொடங்கிய பேரணி மேட்டு தெரு தனியார் திருமண மண்டபம் வரை சென்று முடிவுற்றது. அதன் பின்னர் பா.ஜ.க சார்பில் நெசவாளர்கள் தின விழா தனியார் திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் கலந்து கொண்ட பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நெசவாளர்கள் மத்தியில் உரையாற்றிய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "நீட் தேர்வை ரத்து செய்வோம் என பொய் வாக்குறுதியை கொடுத்தது தி.மு.க, இன்று உயிரிழக்கின்ற ஒவ்வொரு மாணவருக்கும் பதில் சொல்ல வேண்டியது தி.மு.க தான். மாநிலத்தினுடைய முதலமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சரும் நிச்சயம் பதில் சொல்ல வேண்டும்.
இன்று மீண்டும் நான் அதற்கு வாக்குறுதி கொடுக்கிறேன் என சொல்லுகிறார் இன்னும் எத்தனை பொய் வாக்குறுதிகள் கொடுத்து தமிழக மாணவர்களை ஏமாற்ற போகிறீர்கள். உயிரிழந்த சடலத்தில் மீது அரசியல் நடத்துவது தி.மு.க-வின் பழக்கமும் பாரம்பரியமும். அந்த வகையில் இன்று இருக்கக்கூடிய மக்களுடைய எதிர்ப்பினை சமாளிப்பதற்காக நீட் தேர்வு தற்கொலையை அரசியல் ஆக்குவதற்காக முயற்சி செய்கிறார்கள்" என திமுக மீது குற்றம் சாட்டி பேசியுள்ளார்.