சென்னை ராயபுரம் கல்மண்டபம் பகுதியில் ஐ ட்ரீம்ஸ் தியேட்டர் இயங்கி வருகிறது. இந்த தியேட்டர் தி.மு.க-வைச் சேர்ந்த முக்கிய பிரமுகரான ஐட்ரீம் மூர்த்தி எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று இந்த தியேட்டரில் பொன்னியின் செல்வன் 2 படம் பார்க்க வந்த நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 7 பேர் டிக்கெட் கேட்டுள்ளனர்.
அப்போது அவர்களில் 4 பேருக்கு மட்டுமே படம் பார்க்க டிக்கெட் கொடுக்கப்பட்டு, 3 பேருக்கு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தியேட்டர் ஊழியர்களிடம் 7 நரிக்குறவர்களும் கேட்டபோது 4 டிக்கெட் மட்டும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், ‘தியேட்டர் ஊழியர்கள் வேண்டுமென்றே தங்களுக்கு டிக்கெட் கொடுக்க மறுத்தனர்’ என, நரிக்குறவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான தியேட்டரில் நரிக்குறவர் சமூக மக்களுக்கு டிக்கெட் மறுக்கப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சென்னை ரோகினி தியேட்டரில் ‘பத்து தல’ படம் பார்க்க சென்ற நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த குடும்பத்துக்கு தியேட்டர் ஊழியர்கள் டிக்கெட் கொடுக்க மறுத்தனர். அந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.