சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவினர் உதயநிதி பேசியதற்கு மன்னிப்பே கேட்டாலும் அவரை கைது செய்யாமல் விடக்கூடாது என்று அவர் மீது பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதனை சட்டப்படி எதிர்கொள்ள தயார் என்று உதயநிதியும் பதிலடி கொடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாது உதயநிதி தலையை எடுத்து வருபவருக்கு 10 கோடி ரூபாய் தருவதாக அயோத்தியைச் சேர்ந்த சாமியார் அறிவித்துள்ளார். அது மேலும் இந்த விஷயத்தை பெரிதாக்கியுள்ளது. யாரைப் பார்த்தாலும், எங்கு பார்த்தாலும் சனாதனம் பற்றிய பேச்சுதான் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்தியாவையே மாற்றி காட்டுவேன் என்று பிரதமர் மோடி சொல்லியிருந்தார். அவர் சொன்னதை செய்துவிட்டார் 9 ஆண்டுகளுக்கு பிறகு "இந்தியா" என்ற பெயரை "பாரத்" என்று தற்பொழுது ஜி20 மாநாட்டில் அவரது இருக்கைக்கு முன் உள்ள பெயர்ப் பலகையில் மாற்றியுள்ளார்.
அதை தொடர்ந்து திமுக என்ற கட்சியே சனாதனத்தை ஒழிக்க தொடங்கப்பட்டது தான். ஆட்சியை பற்றிய கவலை எங்களுக்கு இல்லை, கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சனாதனத்திற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை, வருபவர் போகிறவர் எல்லாம் தலைக்கு விலை பேசுகிறார்கள் ரொம்பவே டிமெண்ட் அதிகமாகிவிட்டது, நகைச்சுவையாக இருக்கிறது இதையெல்லாம் பார்க்கிறபோது” என்றார்.
அதையடுத்து ”அம்பேத்கார் பேசாததை நான் பேசவில்லை, பேரறிஞர் அண்ணா பேசாததை நான் பேசவில்லை. பாஜகவை விட்டுவிடுங்கள் அது வெறும் பொய்யான தகவல்களைத்தான் பரப்பும், ஒரே ஒரு கேள்வி அதிமுக அவர்களது கட்சியின் பெயரிலேயே அண்ணா பெயர் இருக்கிறது அவரை போல் சனாதனத்தை எதிர்த்தவர் யாரும் கிடையாது. அப்படி இருக்கும் போது அந்த கட்சியில் இருப்பவர்கள் கருத்து என்ன? அதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அதிமுக கட்சியை சேர்ந்த தலைவர்கள் யாரையேனும் பார்த்தீர்கள் என்றால் எனக்கு கேட்டு சொல்லுங்கள்" என்றும் அவர் கூறினார்.