செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தென்மேல்பாக்கம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளைச் செய்து தர கோரி 3வது வார்டு உறுப்பினர் விவேக் மற்றும் தென்மேல்பாக்கம் கிராம மக்கள் சார்பில் மனு அளித்தனர். அந்த மனுவில், 'தென்மேல்பாக்கம் ஊராட்சியில் குடிநீர் பிரச்னை,கால்வாய் தூர்வார வேண்டும், கொசுமருந்து தெளிக்க வேண்டும், உள்ளிட்ட பிரச்னைகளைச் சரி செய்து தர வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது'.
இதனைத்தொடர்ந்து மனு அளித்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குநர் இந்துபாலா, காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராமன் மற்றும் அதிகாரிகள் தென்மேல்பாக்கம் ஊராட்சியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அனைத்து அடிப்படை பிரச்னைகளும் உடனடியாக சரி செய்து தரப்படும் என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துச் சென்றனர்.
இந்த சூழலில் தென்மேல்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜன், துணைத் தலைவர் சாந்தகுமார் ஆகிய இருவரும் ஊராட்சி நிதியை 4.50 கோடி ஊழல் செய்ததாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.