தீ விபத்தில் ஏற்பட்ட காயங்களுடன் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்திற்கு நிவாரண உதவி கேட்டு மனு அளிக்க வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி தாலுக்கா மடப்புரம் கிராமத்தில் கடந்த மாதம் ஜுலை 28ம் தேதி இரவு கலைவாணன் என்பவரது கூரைவீடு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிசென்று தீயை அணைப்பதற்காக முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் இருந்த சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.
இதில் கருணாநிதி, மணிமாறன், ஜெயக்குமார், ஜெயப்பிரதாப், சுரேஷ், ராஜேஷ், வினோத், சரவணன், இளையபெருமாள், ஜெகதீசன், மதன், நடராஜன், சுரேஷ், கலியபெருமாள் உட்பட 15 பேர் காயமடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மற்றும் திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று பலர் தற்போது வீடு திரும்பியுள்ளனர்.
விவசாய வேலை மற்றும் கட்டுமான வேலைகளுக்கு செல்லக்கூடிய 15 பேரும் தீக்காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சைபெற்றாலும் இன்னும் தீக்காயங்கள் முழுமையாக குணமடையவில்லை. இதனால் எந்த வேலையும் செய்ய முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் கஷ்டமான சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் எந்தவித வருமானமும் இல்லாமல் தங்கள் குடும்பம் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானதால் ஆறான தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் மகாபாரதியை நேரில் சந்தித்து தங்கள் குடும்பங்களை காப்பாற்ற உரிய நிவாரண உதவி கேட்டு மனு அளித்தனர். கலெக்டர் மகாபாரதியும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆறாத தீக்காயங்களுடன் வந்து 6 பேர் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-ஆர்.விவேக் ஆனந்தன்