பகுதி நேர கேட்டரிங் வேலைக்கு செல்லும்போது ரசம் இருந்த அண்டாவில் தவறிவிழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவனின் மரணத்தின்போது நடத்த பகீர் தகவலை வெளியிட்டுள்ளார் அவரது தாயார்.
கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதி நேரமாக கேட்டரிங் வேலை செய்து வந்த 20 வயது மாணவர், கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இந்த அதிர்ச்சி மரணத்தில் அவரது தாய் பகிர்ந்துள்ள தகவல் பகீர் கிளப்பி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்தவர் 20 வயதான கல்லூரி மாணவர் சதீஷ். இவர் சென்னை, கொருக்குப்பேட்டையில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.
இவர், குடும்பத்தின் பாரத்தை குறைப்பதற்காக கல்லூரிக்கு செல்லும் நேரம் தவிர்த்து பகுதி நேரமாக அவ்வப்போது உணவு பரிமாறும் கேட்டரிங் வேலைக்கும் சென்று கொண்டிருந்தார்.
கடந்த 23 ஆம் தேதி நண்பர்கள் அழைப்பின்பேரில் மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் உணவு பரிமாறச் சென்றுள்ளார் மாணவர் சதீஷ். அப்போது, சாம்பார்- காய்கறிகளை பரிமாறுவதற்காக எடுத்து வர சமையல் கூடத்திற்கு சென்றுள்ளார்.
அவற்றை பின்னால் இருந்து தள்ளி வரும்போது மூடாமல் கொதிக்கக் கொதிக்க திறந்து வைக்கப்பட்டிருந்த ரச அண்டா பாத்திரத்தில் நிலைதடுமாறி விழுந்துள்ளார். அவர் கதறித் துடிக்கவே அருகில் இருந்த நண்பர்கள் பதறியடித்து ஓடி வந்து சதீஷை தூக்கியுள்ளனர். அவரது வயிறு, தொடை, கை கால்கள் உள்ளிட்ட பகுதிகள் முற்றிலும் தீக்காயம் அடைந்தன.
நண்பர்கள் அவசரமாக தூக்கிக்சென்று மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். அங்கிருந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
பலத்த தீக்காயங்களுடன் 6 நாள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கல்லூரி மாணவர் சதீஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பகுதி நேர பணியாக உணவு பரிமாறச் சென்ற கல்லூரி மாணவர் கொதிக்கும் ரசத்தில் விழுந்து தீக்காயம் அடைந்து உயிரிழந்த சம்பவம் சக மாணவர்கள், உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சதீஷின் தாயார் இந்த மரணம் குறித்து கூறுகையில், ‘’எனது மகன் பி.சி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தான். காலேஜில் படிக்கிற பசங்க கூப்பிடுறாங்களேனுட்டு கேட்டரிங் வேலைக்குப் போனான். சாம்பார் குண்டானை எடுக்கப் போய் ரசத்தில் விழுந்துவிட்டான்.
மேல இருந்து கீழே வரை என் புள்ளை உடம்பு வெந்தே போச்சு. அந்த ரசத்தையே ஊற்றி அங்கிருந்த எல்லோருக்குமே சாப்பாடு போட்டிருக்காங்க’’ என உடைந்து அழுகிறார் அந்தத் தாய்.