சென்னை, தி.நகர் பஸ் ஸ்டாண்டு - மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனை இணைக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கும் ’ஸ்கை-வாக்’ மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறக்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று மாலை இந்த ஆகாய மேம்பாலத்தை மாம்பலத்தில் திறந்து வைக்கிறார்.
தி.நகர் ஒரு வர்த்தக நகரம். ஹார்ட் ஆஃப் தி சிட்டி எனவும் அழைக்கப்படுகிறது. மாம்பலம் ரெயில் நிலையத்தில் இறங்கி தி.நகர் பஸ் நிலையத்திற்கு செல்வதற்கு கூட்ட நெரிசலைக் கடந்து தான் வர வேண்டும். இந்த நெரிலைக் குறைப்பதற்காக மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இந்த ஆகாய நடைபாதை கட்டப்பட்டுள்ளது. இன்று இந்த ஆகாய நடைபாதை திறப்பு விழா. இதற்கான எதிர்பார்ப்புகள் சென்னைவாசிகளிடையே அதிகரித்து வரும் நிலையில் இந்த ஸ்கை வாக் மேம்பாலத்தின் 5 முக்கிய அம்சங்கள் பற்றி இங்கே தெரிந்துக் கொள்வோம்.
1. தி.நகர் பஸ் நிலையத்தில் இருந்து மேட்லி சாலை, பார்டர் சாலை வழியாக மாம்பலம் ரெயில் நிலையம் வரை 13 அடி அகலத்தில் 1,968 அடி நீளம் கொண்ட நடை மேம்பாலம் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே மிக நீளமான உயர்மட்ட நடை பாதை. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியானது பூங்காக்களை சீரமைத்தல், நீரூற்றுகள் நிறுவுதல், மேம்பாலங்களை அழகுபடுத்துதல் மற்றும் புதிய மேம்பாலங்களை அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆகாய நடைபாதையும் அதன் கீழ் கட்டப்பட்டது தான்.
2. இந்த ஸ்கை வாக் மூலம் பொதுமக்கள் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்கு ஐந்து நிமிடத்தில் சென்றுவிட முடியும் என்று சொல்லப்படுகிறது. இதனால், தினமும் மாம்பலம் ரயில் நிலையத்திற்கு வரும் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஆகாய நடைபாதையால் பயனடைவார்கள் என்றும் நம்பப்படுகிறது.
3. இந்தியாவிலேயே நீளமான உயர்மட்ட நடைபாதையாக அமைக்கப்பட்டுள்ள இந்த பாதை பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடனும், நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் இரண்டு புறமும் , 8 பேர் முதல் 10 பேர் வரை செல்லும், மின் தூக்கி அமைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமா கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் பாதையை உள்ளடக்கும் இந்த மேம்பாலமானது, நகரும் படிக்கட்டுகளுடனும், பொதுமக்கள் அதிக அளவு நடப்பதற்கு ஏற்ற அகலத்துடனும் கட்டப்பட்டு உள்ளது.
4.இந்த பாலத்தில் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி செல்லும் வகையில் சக்கர நாற்காலி வசதியும் செய்யப்பட்டு உள்ளது. மக்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு மின் விளக்குகள், ஒப்பனை அறை, தீயணைப்பான், 24 மணி நேர கண்காணிப்பு கேமரா வசதியும் செய்யப்பட்டு உள்ளது. மாம்பலம் காவல் நிலையத்தில் இருந்து இந்த கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்க முடியும். நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமிக்காத வண்ணம் கண்காணித்து நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளதாம்.
5. தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கண்கவர் ஓவியங்களும், படிக்கட்டுகளில் வர்ணங்களும் பூசப்பட்டுள்ளது. அதேபோல, ஆகாய நடை மேம்பாலத்தின் அருகில் உள்ள மரங்களிலும் வண்ணப் பறவைகளின் உருவங்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
இந்த ஆகாய நடை மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை நேரில் சென்று திறந்து வைக்கிறார். தி.நகர் எம்எல்ஏ ஜெ.கருணாநிதி மாவட்டச் செயலாளர் மயிலை வேலு, பகுதிச் செயலாளர் கே.ஏழுமலை, மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மேயர் பிரியா ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.