மொபைலில் தனக்குத் தானே ‘RIP’ போட்டுவிட்டு தற்கொலை செய்த இளைஞர் - அதிகரிக்கும் ஓ.சி.டி. மரணங்கள்?

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் தனது புகைப்படத்தை வைத்து அதற்கு ‘RIP’ (Rest in Peace) என்று அஞ்சலி செலுத்திவிட்டு சட்டென தூக்கி தொங்கியுள்ளார்.
மொபைலில் தனக்குத் தானே ‘RIP’ போட்டுவிட்டு தற்கொலை செய்த இளைஞர் - அதிகரிக்கும் ஓ.சி.டி. மரணங்கள்?

கோவை சரக டி.ஐ.ஜி.யாக இருந்த விஜயகுமார் சில வாரங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.அதற்கான காரணமாக காவல்துறை சொன்ன தகவல் ‘அவர் சில காலமாக ஓ.சி.டி. எனப்படும் மன அழுத்த பிரச்னையில் இருந்தார். அடிக்கடி தனக்கு தற்கொலை எண்ணம் வருவதாகவும் உயரதிகாரிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவரை ஆறுதல்படுத்திய உயரதிகாரிகள் நன்றாக ஓய்வெடுக்க சொல்லியதோடு, சென்னையிலிருந்து மனநல கவுன்சிலிங் வல்லுநரையும் அனுப்பி உதவினர். ஆனாலும் திடீரென தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டார்’ என்றனர்.

கம்பீரமான காவல்துறையில் தீரமான பல செயல்களுக்கு சொந்தக்காரரான அதிகாரி விஜயகுமாரின் மரணம் பரபரப்பானதோடு ‘ஓசிடி’ எனும் மன நலம் சார்ந்த சிக்கல் விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்தது. சமூகத்தில் நிறைய பேர் இப்படியான சிக்கலில் உள்ளனர்! என்று அந்த சமயத்தில் மன நல ஆலோசகர்கள் சிலர் சொல்லி வந்தனர். இந்த நிலையில் பொள்ளாச்சியில் நடந்திருக்கும் ஒரு தற்கொலை சம்பவமும் இதை உறுதி செய்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சமத்தூர் அருகே பொன்னாச்சியூர் கிராமத்தை சேர்ந்த தனியார் பேருந்து டிரைவர் சண்முக சுந்தரம். விதவை தாயுடன் வசித்து வந்த இவருக்கு திருமணமாகவில்லை. நண்பர்களிடம் அடிக்கடி ‘தற்கொலை பண்ணிக்க தோணுது’ என்று சொல்லிக்கொண்டு இருப்பவர் கடந்த 8ம் தேதி வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது தனது நண்பர்களுக்கு வீடியோ கால் செய்து தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தன் அம்மாவின் சேலையை கழுத்தில் சுற்றியபடி பேசியுள்ளார். பிறகு தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் தனது புகைப்படத்தை வைத்து அதற்கு ‘RIP’ (Rest in Peace) என்று அஞ்சலி செலுத்திவிட்டு சட்டென தூக்கி தொங்கியுள்ளார்.

வீடியோ காலில் அவர் பேசியது, ஸ்டேட்டஸில் இப்படி ‘ரிப்’ போட்டதை பார்த்து பயந்த நண்பர்கள் சண்முகசுந்தரத்தின் வீட்டுக்கு ஓடிச் சென்று கதவை தட்டியுள்ளனர். திறக்கவில்லை. உடனே ஓட்டை பிரித்து உள்ளே பார்த்த போது அவர் தூக்கில் இறந்தபடி தொங்கியுள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

பிரேதத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கிய போலீஸ் “6 மாசமா ஒரு பொண்ணை காதலிச்சிருக்கார், ஆனால் அது தோல்வியில முடிஞ்சிருக்குது. அதுல இருந்தே மனசு ஒடிஞ்சு இருந்திருக்கார். அடிக்கடி தற்கொலை எண்ணம் பற்றி பேசியவர் 8ம் தேதி இப்படி பண்ணியிருக்கார். ‘உங்களை எல்லாம் விட்டு போறேன்! நிம்மதியா தூங்கப் போறேன்’ அப்படின்னு எழுதிவெச்சுட்டு இறந்திருக்கார்.

மது போதையில் தற்கொலை பண்ணியிருக்கலாம்” என்கின்றனர்.

வரவர உலகமும், மனுஷனும் போற போக்கே சரியில்ல!

-ஷக்தி

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com